சூடேற்றும் அரசியலை செய்து சமூகத்தை சிக்கலில் மாட்டிவிடாமல் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக குரல்கொடுக்க முன்வாருங்கள் ; தே. கா வேட்பாளர் சலீம் கோரிக்கை.


நூருள் ஹுதா உமர்-
கொவிட்-19, கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக இலங்கை போன்ற நாடுகளில் ஏற்பட்ட தாக்கங்கள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போலல்லாது, கட்டுப்பாட்டு நிலையில் அமைந்துள்ளது எமக்கு ஆறுதலாக அமைந்தாலும், இக்காலகட்டத்தில் எமது சமூகம் வெவ்வேறான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்குவதைப் பார்க்கின்றபோது அதற்கான தீர்வுகளை நோக்கி கூடுதலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டிய கட்டாய காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என தேசிய காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வேட்பாளரும், சட்டம்,ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு மற்றும் கொரோணா நிலைகள் பற்றி பேசிய அவர்,
எமக்கு முக்கியமான சவாலாகக் காணப்படுவது இத்தொற்றின் மூலம் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காது இருப்பது. இது எமது சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கின்ற உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட வேண்டும் என்ற இறுக்கமான, அதுவும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுகாதார தரப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பினால் எமக்கு கவலை மட்டுமன்றி பயமும் உருவாகி வருகிறது. உலக சுகாதார ஸ்தாபன கொள்கைகளின் பிரகாரம் ஏனைய நாடுகளின் நிலைப்பாடு மற்றும் அந்நாடுகளில் இது தொடர்பாகச் செயற்படுகின்ற முறைமைகள் திருப்தியாக அமைந்தாலும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிபாரிசுகள் ஏனைய நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், எமது நாட்டில் மட்டும் அதை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமான சம்பவமாக கருதவேண்டும்.
இச்செயற்பாட்டினை ஒரு சமயத்துக்கு மட்டுமல்லாது, மனிதாபிமானத்துக்கு எதிரான செயலாகவே எம்மால் கருத முடிகின்றது.
மனிதம் அல்லது மனிதாபிமானம் செயற்பட வேண்டிய இக்காலகட்டத்தில், ஒரு சிறு குழுவினரின் அல்லது அரசியல் ரீதியான குழுவினரின் ஆதாயம் தேடும் செயலாக இதனைப் பயன்படுத்த நினைப்பது ஒரு மனிதத்துக்கு அல்லது மரணித்த உடலுக்கு மற்றும் ஆத்மாவுக்கு செய்யும் அநியாயமாகும். அதிலும் குறிப்பாக விடயத்துக்கு பொறுப்பான சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் இறுக்கமான போக்கை கையாள்வது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட செயற்பாடாகும்.
எனவே, இக்கட்டான இக்காலகட்டத்தில் எமது சமூகத்திலுள்ள அரசியல் சமூக தலைவர்கள் மட்டுமல்லாது ஆத்மீக தலைவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணமாக காணப்படுகின்றது. இன்றைய நிலையில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இவ்விடயம் மாற்று மதத்தவர்களுக்கும், ஏனைய அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் சுகாதாரத் துறையினருக்கும் தெளிவுபடுத்த வேண்டியது எமது தலைவர்களின் கடமையாகும்.
இது சம்பந்தமாக ஏனைய மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் தெளிவூட்டல்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், அவர்களும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியும் என எனது கருத்தை முன்வைக்கிறேன்.

மாறாக அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் மக்களையும் அரசையும் சூடேற்றும் தருணம் இதுவல்ல. இவ்வாறான சூடேற்றும் அணுகுமுறையினை நாம் தொடர்ந்தும் பின்பற்றுவோமாயின், எமது சமூகத்தை பெரும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையாகவே அது காணப்படும்.
இதனடிப்படையில் இறந்த உடலிலிருந்து வைரஸின் தாக்கம் ஏற்படாது என்கின்ற அறிவியல் சான்றுகளை அடிப்படையாக வைத்து அரசியல், அறிவியல், ஆன்மீகத்தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டான வேண்டுகோளை அரசிடம் முன்வைக்க முடியும். இது ஒரு தொடர் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதுடன் பல்வேறு தரப்புகளுடனும் இப்பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொள்கின்றேன். ஏனெனில் இன்று இயற்கையாக மற்றும் வேறு நோய்களின் மூலம் மரணங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய உடல்கள் சம்பந்தமாகவும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -