மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கடந்த வருடம் (2019) நடைபெற்ற க.பொ .த.சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்னேற்றம் கண்டிருக்கிறது. இது நமது பிரதேசத்துக்கு கிடைத்த கல்வி ரீதியிலான மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முழுமுதற் காரணமாக இருக்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா அவர்களை வாழ்த்துவதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
தேசிய மட்டத்தில் மொத்தமாக 97 கல்வி வலயங்களும் , 2 உப கல்வி வலயங்களும் இருக்கின்றன.இதில் கடந்த 2018 ஆம் வருடம் நமது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது பெறுபேறுகள் அடிப்படையில் 57 ஆவது இடம் வகித்திருந்தது. இந்நிலையை மாற்றியமைத்ததன் காரணமாக 15 படிகள் முன்னேறி 2019 ஆம் ஆண்டில் அதாவது ஒரு வருட இடைவெளியில் 42 வது வலயமாக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் கிழக்கில் மாகாண ரீதியில் காணப்படும் 17 கல்வி வலயங்களில் 5 வது இடத்தினைப் பெற்று, தமிழ் பேசும் கல்வி வலயங்களிலே முதலாவது முன்னேற்றமடைந்த கல்வி வலயமாகவும் கடந்த 2019 இல் நடைபெற்ற க.பொ .த .சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 இல் 60 மாணவர்கள் மாத்திரமே 9A சித்தியை பெற்றிருந்தனர். ஆனால் 2019 இல் 100 மாணவர்கள் 9A சித்தியைப் பெற்றிருக்கின்றனர். இதனை மிகப்பெரும் இமாலய சாதனையாகவே என்னால் கருதமுடிகிறது.
அதுமட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டின் பெறுபேறுகள் அடிப்படையில் உயர்தர வகுப்புக்களுக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 73 வீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குரிய 5 பாடசாலைகள் , தவறுதலாக மட்டக்களப்பு கல்வி வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 2019 இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஏறாவூர் அறபா வித், றஹ்மானியா வித், ஓட்டமாவடி ஷாதுலிய்யா வித், அறபா வித் மற்றும் பூநொச்சிமுனை இக்ரா வித் ஆகிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குரிய பாடசாலைகளின் பெறுபேறுகளும் சேர்க்கப்பட்டால் தேசியத்தில் 35 ஆவது இடத்தினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பிடிக்கும் எனவும் தரவுகள் கூறுகின்றன.
எனவே இவ்வாறாக மாகாண , தேசிய மட்டங்களில் தனது கல்வி வலயத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று சாதனை படைத்த , நமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றி கடந்த வருட க.பொ.தா.சாதாரண தர பெறுபேற்றில் அதியுயர் சிறப்புச் சித்திகளை பெறுவதற்கு வழிவகை செய்த மதிப்புக்குரிய மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா அவர்கள் இன்னும் நீண்ட காலங்கள் ஆரோக்கியமாக இருந்து நமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று சங்கைக்குரிய இந்த றமழான் மாதத்தில் மனதார வாழ்த்துவதோடு, இதற்கு சிறப்பான முறையில் வழிநடத்தல்களை வழங்கிய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.. மன்சூர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.