திகன தேரரின் மறைவு சமய சமூக நல்லிணக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்- பைஸர் முஸ்தபா அனுதாபம்

ஐ. ஏ. காதிர் கான்-

திகன, பேரெகெட்டிய விகாராதிபதி கீனபெலஸ்ஸே உபாலி ஞானிஸார தேரரின் மறைவு, பெளத்த மக்களுக்கு மாத்திரமல்ல, இலங்கை வாழ் குறிப்பாக கண்டி வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும் என்று, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திகன - பேரெகெட்டிய விகாராதிபதியாகப் பணியாற்றிய கீனபெலஸ்ஸே உபாலி ஞானிஸார (48) தேரர், ஏப்ரல் 29 ஆம் திகதியன்று காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் நேற்று (30) இடம்பெற்றிருந்த நிலையிலேயே, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இலங்கை வாழ் மற்றும்
கண்டி மாவட்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறித்த இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 சமூகங்களுக்கிடையில் நல்லுறவையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தி வாழ்ந்த குறித்த தேரரின் இழப்பு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அந்த இரங்கல் செய்தியில் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். 

கண்டி, திகன வன்முறைக் கலவரத்தின் போது மறைந்த தேரர் வாழ்ந்த அம்பால பிரதேசத்தின் பள்ளிவாசல் பகுதிக்குள் வன்முறையாளர்களை வர விடாமல் தேரர் முன் நின்று தடுத்தமையானது, அவரது சமய ஒற்றுமையையும் முஸ்லிம்கள்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

இப்பிரதேசம் திகன கலவரத்தின் போது உயிர் இழந்த சாரதியின் கிராமமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பால கிராமத்தில் வாழும் எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஒரு கீறல்களோ அல்லது பாதிப்புக்களோ ஏற்படாமல், இங்குள்ள இளைஞர்களை ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்திருந்த ஒரு நல்ல மனிதர். 

இதனை எம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. சகல இன மக்களுடனும் நெருக்கமான உறவைப் பேணி மிகவும் அன்னியோன்னியமாகப் பழகியவர். அது மாத்திரமல்ல, முஸ்லிம் சமய கலாசார தபால் துறை அமைச்சினால் சிறந்த பள்ளிவாசல்களுக்கான விருது வழங்கும் விழாவில் அவர் சமய சகவாழ்வுக்காக விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரு பௌத்த சமயப் பெரியாராவார்.

கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பேரெகெட்டிய விஹாராதிபதியின் மரணம் சமய , சமூக நல்லிணக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் பேரிழப்பாகும். அந்நாருக்கு கண்டி வாழ் முஸ்லிம்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மறைந்த தேரரை, தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவேன். அவருடன் சிநேகிதமாக, மிக நெருக்கமாகப் பழகியிருக்கின்றேன். நான் எதைச் சொன்னாலும், அதன்படி கேட்டு நடக்கும் நல்ல உள்ளமும் மனப்பக்குவமும் மிகுந்த ஒரு சமய, சமூக தேரர் என்றால் அது மிகையாகாது. திகன பிரச்சினையில் கூட, அவர் என்னை மதித்து செயற்பட்டார்.

 அவ்வளவுக்கு நல்லவர். அம்பால பிரதேச முஸ்லிம்களுக்கு உதவி ஒத்தாசைகளைப் புரிந்தார். அவர்களைப் பாதுகாத்தார். அவரது இச்செயல், இனவாத செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக இனங்காணப்பட்டது என்பதே உண்மை. இதனால்தான், முஸ்லிம்கள் இத்தேரரை நேசித்தனர். நாமும் நேசித்தோம். இவ்வாறு அந்த அனுதாபச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரெகெட்டிய விஹாராதிபதி மறைந்த தேரருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, அரசியல் பிரமுகர்கள், பௌத்த சமயத் தலைவர்கள், ஊர் மக்கள், கண்டி மாவட்டம் மற்றும் நகர ஜம் இய்யத்துல் உலமா, கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம். ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -