பிரதேச சபையில் நிதிப் பற்றாக்குறை, சம்பளக் கொடுப்பனவின் ஒரு பகுதியினை விட்டுக்கொடுப்பதற்கு தாமாக முன்வந்த ஊழியர்கள்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச சபையில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் ஒரு தொகுதியினரை செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்திவிட்டதாகவும், அவர்களை மீண்டும் பணிகளில் இணைத்துக் கொள்ளுமாறும் வேண்டி (30) ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் சபை உறுப்பினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது சம்மந்தமாக சபையில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (4) ம் திகதி திங்கட்கிழமை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அனைத்து பிரிவுகளிலும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் கொரோனா தொற்று பாதுகாப்பு சட்டதிட்டங்களுக்கமைய அலுவலகம் மற்றும் நூலகங்களின் பணிகளும், ஆளணிகளையும் மட்டுப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதையும் திண்மக்கழிவகற்றல், சுகாதாரம், குடிநீர் வழங்கல், காவலாளிகள் போன்றவற்றின் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதனையும் செயலாளர் குறிப்பிட்டதோடு, கொரோனா தொற்றினால் பிரதேசசபைக்கு ஏற்பட்டிருக்கும் வருமான வீழ்ச்சி தொடர்பாகவும் விபரமாக விளக்கி கூறினார்.

நிதி நிலவரத்தினை புரிந்து கொண்ட அனைத்து ஊழியர்களும் தமது சம்பளக் கொடுப்பனவின் ஒரு பகுதியினை விட்டுக்கொடுப்பதற்கு தாமாக முன்வந்தனர்.

இதனை வரவேற்ற செயலாளர் சபையின் பணிகளும், உங்களது வாழ்வாதாரமும் முடிந்தவரை பாதிக்கப்படாத வகையில் பொருத்தமான பணி ஒதுக்கீட்டையும், சபையின் நிதி நிலவரத்திற்கேற்ற கொடுப்பனவினையும் வழங்க தாம் முயற்சிப்பதாக உறுதியளித்தார்.

இதன்போது, செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தின் பொதுமக்களின் கவனத்திற்கு வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்தார்.

மழை, வெள்ளம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்று நோய் அபாய காலங்களிலெல்லாம் உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகதார, திண்மக் கழிவகற்றல், குடிநீர் விநியோக, வீதி, வடிகான் பணியாளர்களும், சாரதிகளும் மிகக் குறைந்த கொடுப்பனவுடன் எமது மக்களுக்காக தம்மை தியாகம் செய்து பணியாற்றி வருகின்றனர்.

விசேடமாக தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் நோய்த் தொற்றும், உயிராபத்தும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ள சூழ்நிலைகளில் இந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தமதோ, தமது மனைவி மக்கள், குடும்பத்தினரின் உயிரையும் பொருட்படுத்தாது மாதாந்தம் 15,000 ரூபாய் தொகையினை பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.

எனவே வசதி படைத்தோர் இவர்களின் நலன் கருதி தர்மங்களை புரிய வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -