அமெரிக்காவின் அநீதிக்கு அரபுநாடுகளின் ஒத்துழைப்பும், ஈராக்கினுள் இஸ்ரேலிய படையினரின் நுழைவும்.

இருபதாவது தொடர்..
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது-

ராக்கின் எண்ணை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், வளைகுடாவில் அமெரிக்க படைத் தளங்களை நிரந்தரமாக்கிக் கொள்வதர்காகவும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காகவும், நவீன ஆயுதங்களை பரீட்சிப்பதற்காகவும் சோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 21.03.2003 அன்று ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதலை ஆரம்பித்தனர்.

உலகை அச்சுறுத்தக்கூடிய பேரழிவு தருகின்ற இரசாயன ஆயுதங்கள் சதாம் ஹுசைனிடம் உள்ளதாகவும், அமெரிக்காவின் நியோர்க் வர்த்தக கட்டிட தாக்குதலுடன் தொடர்புடைய அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனுடன் சதாம் ஹுசைன் கூட்டணி வைத்துள்ளார் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அத்துமீறிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் டவிள்யு புஸ்சின் இந்த குற்றச்சாட்டுக்கு அன்றைய பிரித்தானிய பிரதமர் டோனி பிளையரும் பங்காளியாக இருந்தார். அவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின்பு “தாங்கள் உலக மக்களை நம்பவைப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துத்தான் ஈராக்கை ஆக்கிரமித்தோம்” என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், மதச்சார்பற்ற கொள்கையுடைய சதாம் ஹுசைன் மீது இஸ்லாமிய மதவாத கொள்கையுடைய அல்-கொய்தா இயக்கத்தினர் வெறுப்பினைக் கொண்டிருந்தனர். சதாம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் அல்-கொய்தா இயக்கத்தினரால் ஈராக்கினுள் ஊடுருவ முடியவில்லை. இந்த நிலையில் ஒசாமா பின் லாடனுடன் சதாம் ஹுசைன் கூட்டணி வைத்திருந்தார் என்பது அப்பட்டமான பொய்யாகும்.

ஈராக் 1991 இல் போரை எதிர்கொண்டதற்கும், 2003 இல் எதிர்கொண்டதற்கும் இடையில் அதிகமான வேறுபாடுகள் இருந்தது. உலகின் நான்காவது படைபலத்தினைக்கொண்ட நிலையில் முதலாவது வளைகுடா போரை ஈராக் சந்தித்தது. ஆனால் மிகவும் பலயீனமான நிலையில் இரண்டாவது ஆக்கிரமிப்பை ஈராக் எதிர்கொண்டது.

குவைத்தை ஆக்கிரமித்ததற்காக 1990 லிருந்து நீண்டகால பொருளாதார தடையினால் ஈராக்கிய மக்கள் வறுமையில் வாடினார்கள். ஈராக்கிய மசகு எண்ணையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ, வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யவோ முடியாத நிலையில் இறுக்கமான கண்காணிப்பு இருந்தது.

அத்துடன் முற்றாக சேதமடைந்த ஈராக்கிய இராணுவம் மீள்கட்டமைப்பு செய்யப்பட முடியாமல் பலமிழந்து காணப்பட்டதுடன், அமெரிக்க படைகளின் சக்திமிக்க ஆயுதங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நவீன ஆயுதங்கள் ஈராக்கிய இராணுவத்திடம் இருக்கவில்லை.

நீண்டகால பொருளாதார தடையின் பாதிப்பினால் வளைகுடா நாடுகளில் ஈராக் மிகவும் வறுமை நிலையில் இருந்தது. ஜோர்டான், சிரியா போன்ற அயல் நாடுகளாலும் மறைமுகமாக உதவி செய்ய முடியாத நிலையில் அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பு இருந்தது.

குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தபோது அதனை மீட்பதற்காக ஈராக் மீது போர் தொடுத்ததை ஓரளவு நியாயப்படுத்தினாலும், பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்று தெரிந்திருந்தும் இறைமை உள்ள ஒரு நாட்டின் மீது 2003 இல் அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படையினர் போர் தொடுத்ததை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் ?

1991 இல் குவைத்தை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்க இராணுவம் செய்த வெளிப்படையான கொலை வெறியாட்டத்தையும், அதனால் இலட்சக்கணக்கான ஈராக்கிய முஸ்லிகள் கொல்லப்பட்டதையும் அமெரிக்காவின் அனுசரணையோடு இஸ்ரேல் செய்த மறைமுக தாக்குதலையும் அரபு நாடுகள் நன்றாக அறிந்திருந்தது.

அவ்வாறிருந்தும் இறைமையுள்ள ஈராக் நாட்டின்மீது எந்தவித நியாயமான காரணமுமின்றி பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்து இராணுவ நடவடிக்கைக்கு தயாரானபோது அதன் விபரீதத்தையும், ஈராக்கிய மக்களுக்கு ஏற்படப்போகும் அழிவுகள் பற்றியும் நன்றாக அறிந்திருந்தும் சதாம் ஹுசைன் என்ற ஓர் தனிப்பட்ட மனிதர் மீது இருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மக்களை பற்றி சிந்திக்காமல் அரபு நாடுகள் யுத்தத்துக்கு தயாரானது.

முதலாவது வளைகுடா போரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளில் அங்கம் வகித்த பல ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது வளைகுடா யுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் மன்னர் ஆட்சி நடைபெறுகின்ற சவூதி அரேபியா தலைமையிலான முஸ்லிம் பெயர்தாங்கிய அரபு நாடுகள் ஈராக் மீதான போருக்காக பல பில்லியன் ரூபாய்களை வழங்கியதுடன், இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் கொலைகளுக்கு பங்காளியானது.

1991 க்கு முன்பு ரஷ்யாவுக்கு போட்டியாக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்களை முதலாவது வளைகுடா யுத்தத்தில் ஈராக்கில் பரீட்சித்ததுபோல், அதன்பின்பு தயாரிக்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களை 2003 இல் இரண்டாவது வளைகுடா யுத்தத்தில் ஈராக் மீது அமெரிக்கா பரீட்சித்தது.

இந்த யுத்தத்தில் உலகில் மனிதகுலத்துக்கு என்றுமே நடந்திடாத பேரவலங்கள் அரபு நாடுகளின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது. அமெரிக்கா வழமைபோன்று பலயீனமான ஈராக் மீது விமான தாக்குதலை நடாத்தியது. அதன் பின்பு ஈராக்கை சுற்றி பல முனைகளில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்து ஈராக்கை கைப்பேற்றியது.

ஈராக் முற்றாக வீழ்ந்ததன் பின்பு இஸ்ரேலிய படைப்பிரிவு ஈராக்கினுள் நுழைந்தது. அங்கு இஸ்ரேலினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல அதிர்ச்சியூட்டும் காரியங்கள் நடந்தேறியது. இது உலக இஸ்லாமியர்களை துயரத்தில் ஆழ்த்தியது. ஆனால் அரபு நாடுகள் வாய்மூடி மௌனமாக இருந்தது.

அவ்வாறு இஸ்ரேலிய படைப்பிரிவினர் ஈராக்கினுள் நுழைந்து நடாத்திய அதிரடி நடவடிக்கைகளை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்.


தொடரும்.................
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -