பொதுத் தேர்தல் 2020 அரசியல் களம் எனது பார்வை-1-வை எல் எஸ் ஹமீட்


ந்தப் பதிவுத் தொடரினூடாக இத்தேர்தல் தொடர்பான பல தரப்பட்ட எனது கருத்துக்களை முன்வைக்க உள்ளேன். சுருங்கக்கூறின் முகநூலில் இது எனது தேர்தல் மேடையாகும்.

கடந்த பல ஆண்டுகளாக எனது அரசியல்கருத்துக்களை சமூகவலைத்தளங்களினூடாக முன்வைத்து வந்திருக்கின்றேன். நிறைய சகோதரர்கள் கருத்துக்களை எழுதுவதுடன் மட்டுப்பட்டுத்தாது நேரடி அரசியல் களத்திற்கு வரவேண்டும். இன்ஷாஅல்லாஹ் பாராளுமன்றம் சென்று அந்தக் கருத்துக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முனையவேண்டும்; என்று தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறீர்கள்.

தற்போது தேர்தல் களத்திற்கு நேரடியாக நான் வந்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிறைய அன்பு நெஞ்சங்கள் தரும் ஆதரவு மகிழ்ச்சியளிக்கின்றது; அல்ஹம்துலில்லாஹ்.
அதேநேரம் இளைய தலைமுறையில் பலருக்கு நான் எழுதுகின்ற அரசியல் கருத்துக்களினூடான என்னைப்பற்றிய அறிமுகம் உள்ளபோதும் கடந்தகால அரசியல் ரீதியான தொடர்புகள் செயற்பாடுகள் பற்றித் தெரியாது. அந்தவகையில் அவர்கள் அறிந்துகொள்வதற்காக எனது கடந்தகால அநுபவங்கள் சிலவற்றை “ தடங்கள்” என்ற தொடரினூடாக இரைமீட்டுகின்றேன்.

மறுபுறம்
இத்தேர்தல் களத்தில் தெளிவான அரசியல் கருத்துக்கள் முன்வைக்கப்படவேண்டும். மக்கள் அவற்றில் தெளிவுகண்டு சரியான முடிவினை எடுக்கவேண்டும். அந்தவகையில் இது எனது சமூகவலைத்தள தேர்தல் மேடையாகும்.

எனது தேர்தல் விஞ்ஞாபனம்?
—————————————

இங்கு எனது விஞ்ஞாபனம் எனத் தலைப்பிட்டு அதற்கு கேள்விக்குறி அடையாளம் இட்டுள்ளேன். ஏனெனில் சிறுபான்மைக் கட்சிகள், வேட்பாளர்களைப் பொறுத்தவரை “ விஞ்ஞாபனம்” என்ற சொல் பொருத்தமானதா? என்ற கேள்வி இருக்கின்றது.

“ விஞ்ஞாபனம்” என்ற சொல்லின் பொருள்
———————————————————-

விஞ்ஞாபனம் என்ற சொல் ஆங்கிலத்தில் manifesto என அழைக்கப்படுகிறது. இது லத்தீன் ( Latin) மொழியான manifestum (தெளிவான அல்லது வெளிப்படையான) என்ற சொல்லில் இருந்து மருவி இத்தாலிய மொழியில் manifesto என அழைக்கப்பட்டு பின் இத்தாலிய மொழியில் இருந்து எதுவிதமாற்றமும் இல்லாமல் ஆங்கிலமொழிக்குள் manifesto என்ற அதேவடிவத்தில் உள்வாங்கப்பட்டது. இச்சொல் ஆங்கில மொழியில் 1620ம் ஆண்டுதான் பதிவானது.

இது ஒருவரின் அல்லது ஒரு குழுவினரின் பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட எண்ணங்களை, இலக்குகளை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. இந்த சொல்லுக்குரிய connotation ஆனது, அவர்கள் செயற்படுத்த உறுதிபூண்டுள்ள எண்ணங்கள் அல்லது இலக்குகள் என்பதாகும்.
தற்போதைய modern English இல் இச்சொல்லிற்குரிய denotation மற்றும் connotation ஒன்றிணைக்கப்பட்டு Oxford Advanced Learners Dictionary 8th Edition இல் குறிப்பாக ஒரு அரசியல்கட்சி தாம் தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்பதை எழுத்துமூல அறிக்கையாக வெளியிடுதல் என்று வரைவிலக்கணப்படுத்தி இருக்கிறது.

சுருங்கக்கூறின் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது தாம் எவற்றையெல்லாம் செய்வதாக எழுத்துமூலம்
பிரகடனம் செய்கிறார்களோ அதுதான் விஞ்ஞாபனமாகும்.

இலங்கையில் சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவர்கள் விஞ்ஞாபனம் என்ற ஒன்றை வெளியிடுவது பொருத்தமற்றது. அதனால்தான் மறைந்த தலைவர் ஒருபோதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடவில்லை. ஆனாலும் மக்களுக்காக எவற்றையெல்லாம் செய்யவேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவற்றிற்காக இதயசுத்தியுடன் முயற்சிக்கவேண்டும், தேவையேற்படின் போராடவேண்டுமென நினைக்கிறார்களோ அவற்றை விஞ்ஞாபனம் என்ற சொல்லைத் தவிர்த்து வேறு பொருத்தமான ஒரு தலைப்பின்கீழ் வெளியிடலாம்.
அந்த வகையில் சமூகத்திற்கான எனது கனவுகள், எனது இலக்குகளை “ சமூகத்திற்கான எனது எதிர்பார்ப்புகள்” என்ற தலைப்பின்கீழ் எழுத விழைகிறேன், இன்ஷாஅல்லாஹ்.

பார்வை-2 இலிருந்து இத்தொடர் “ சமூகத்திற்கான எனது எதிர்பார்ப்புகளைச் சுமந்துவரும்”. அதேநேரம் “ எனது பார்வை” என்று தலைப்பிட்டதற்கான காரணம் “ சமூகத்திற்கான எனது எதிர்பார்ப்புகளுடன்” மட்டும் “ எனது பார்வை” மட்டுப்படுத்தப்படாது. அதற்கும் அப்பால் அது பலதரப்பட்ட அரசியல் கருத்துகளையும் உங்கள் உயரிய சிந்தனைக்கு சமர்ப்பிக்கும்.
பொதுவாக கூறுவார்கள், A voter must make an informed decision என்று. அந்த வகையில் வாக்காளர்களாகிய அன்பு நெஞ்சங்கள் அறிவுக்கு வேலைகொடுத்து தேர்தல்களத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை அலசி ஆராய்ந்து தெளிவான முடிவினை எடுக்கவேண்டும்.

உங்களை வரப்போகின்ற பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்போகின்றவர்கள் யாராக இருக்கவேண்டும்; என்பதை பிரதேச அல்லது வேறுவகையான கிட்டிய உணர்வுகளுக்கப்பால் அறிவுரீதியான முடிவினை எடுக்கவேண்டும்.

அம்முடிவினை எடுப்பதற்கான அடிப்படை எவை என்பதில் உங்களுக்கு தெளிவு வேண்டும்.

ஒரு பயணத்திற்காக ஒரு வாகனத்தை தெரிவுசெய்வதானால், நீங்கள் போகவேண்டிய இடம் கல்முனையில் இருந்து கொழும்பு என்றால் சற்று சொகுசான வாகனத்தையும் மட்டக்களப்பானால் ஒரு ஆட்டோவைக்கூட நீங்கள் தெரிவுசெய்யலாம்.

இங்கு உங்கள் வாகனத் தெரிவுக்கு அடிப்படை நீங்கள் செல்லும் தூரமாகும். ஆட்டாக்காரர் உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது உங்கள் ஊரவர் என்பதற்காக கொழும்புக்கு செல்வதற்கு ஆட்டோவைத் தெரிவுசெய்யமாட்டீர்கள்.
அதேபோல், அடுத்து ஐந்து வருடங்களுக்கு அமையப்போகும் பாராளுமன்றம் எவ்வாறு அமையப்போகின்றது? ஆட்சியின் தன்மை எவ்வாறு அமைவதற்கு சாத்தியமிருக்கிறது? நீங்கள் கடந்தகாலங்களில் தெரிவுசெய்தவர்கள் என்ன செய்தார்கள்?

சவால் நிறைந்த புதிய பாராளுமன்றத்திற்கு அவ்வாறானவர்கள் செல்வது பொருத்தமா? அடுத்த அணிகளில் பொருத்தமானவர்கள் இருக்கின்றார்களா? ஆம் எனில் ஊர் என்பதற்காக, உறவு என்பதற்காக, கட்சி என்பதற்காக அவ்வாறனவர்களைப் புறந்தள்ளி பொருத்தமற்றவர்களைத் தெரிவுசெய்யப்போகின்றீர்களா? அல்லது சகல வேறுபாடுகளுக்குமப்பால் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்யப்போகின்றீர்களா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள்தான் உங்கள் தெரிவுக்கு அடிப்படையாக அமையவேண்டுமே தவிர ஊர் ரீதியான, உறவு ரீதியான, கட்சி ரீதியான உணர்வுகள் காரணமாக அமைய முடியாது. அவ்வாறான வெற்று உணர்வுகள் காரணமாக அமையுமாயின் இறுதியில் கைசேதப்படப்போவது சமூகமே!

எனவே, உங்கள் சிந்தனைக்கு இவ்வரசியல் களத்தில் “எனது பார்வை” பலதரப்பட்ட விடயங்களையும் சமர்ப்பிக்கும். சிந்தித்து முடிவெடுங்கள் இன்ஷாஅல்லாஹ்.

இன்ஷாஅல்லா பார்வை தொடரும்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -