அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,
2019ம் ஆண்டு பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க இணைந்த முஸ்லிம் கட்சிகளை ஜனாதிபதி தேர்தலின் பின் பெரமுன கைவிட்டமை மிகப்பெரிய தவறாகும்.
முஸ்லிம் பெரும் கட்சிகளெல்லாம் சஜித்துடன் நிற்கும் போது முழு சமூகத்தின் ஏச்சுக்களையும் திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு முதலில் பகிரங்கமாக பெரமுணவுடன் இணைந்து கொண்டது உலமா கட்சியாகும். அதுவும் அவர்களின் அழைப்பின் பேரிலேயே இணைந்து கொண்டது.
இப்போது சொல்கிறார்கள் உலமா கட்சிக்கு வாக்கு வங்கி பெரிதாக இல்லை என்று. அப்படியாயின் ஏன் பெரமுனவுடன் இணைய உலமா கட்சியை அழைக்க வேண்டும்.?
அதே போல் ஹசனலியின் கட்சி, அதாவுள்ளாவின் கட்சியும் இணைந்தன.
ஜனாதிபதி தேர்தலின் பின் இந்தக்கட்சிகளை அரச கட்சி என்ற வகையில் பெரமுன பலப்படுத்தியிருக்க வேண்டும். கோட்டாவுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதில் இக்கட்சிகளின் பிரசாரம் பங்களித்தது.
அதே போல் பொதுத்தேர்தலின் போது இக்கட்சிகளை அழைத்து அவர்கள் இணைந்து போட்டியிடப்போகிறார்களா, தனித்து போட்டியிடப்போகிறார்களா, போட்டியிடாமல் ஆதரவளிக்கப்போகிறார்களா என்று ஆலோசித்திருக்க வேண்டும். இவை எதுவுமே நடக்கவில்லை.
இதன் காரணமாக அரசுடன் இணைந்த முஸ்லிம் கட்சிகள் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டன.
மட்டக்களப்பில் வாக்கு வங்கி இல்லாத சிறு தமிழ் கட்சித்தலைவர்களை மொட்டில் போட்டியிடச்செய்ய முடியுமாயின் ஏன் முஸ்லிம் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் வேட்பாளர்களை மொட்டில் போட்டியிட செய்ய முடியவில்லை.
பெரமுனவின் சில முஸ்லிம் தலைவர்களின் பேச்சைக்கேட்டு முஸ்லிம் கட்சிகள் ஒதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இவற்றின் காரணமாக, இத்தகைய உள் வீட்டு மோதல்கள் காரணமாக பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றிபெறக்கூடிய சாத்தியம் இன்று வரை இல்லை. பெரும் பாலும் மொட்டில் ஒரு முஸ்லிம் மட்டுமே தெரிவாகலாம் என்ற நிலையே இன்று உள்ளது.
இவ்வாறு மொட்டில் போட்டியிடும் முஸ்லிம்கள் தோல்வியுற்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் பொதுஜன பெரமுனவும் அதன் முஸ்லிம் தலைவர்களுமே பொறுப்பெடுக்க வேண்டும். அதற்கு பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது.
இந்த நிலையிலும் உலமா கட்சியினராகிய நாம் திகாமடுல்ல, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டாலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவுக்கட்சி என்ற வகையில் ஏனைய மாவட்டங்களில் பெரமுனவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றோம். இத்தனைக்கும் பெரமுனவினால் எமக்கு ஒரு சிறிய வளமோ, அதிகாரமோ தராத நிலையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
இனியாவது பொதுஜன பெரமுன தனக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளை அழைத்து தமக்கிடையிலான புரிந்துணர்வை செயற்படுத்தி முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கான திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி இப்படியே இருந்து விட்டு, முஸ்லிம்களுக்கு எவ்வளவு சொல்லியும் அரச கட்சிக்கு ஓட்டுப்போடவில்லையே என பின்னர் அரச தரப்பு ஒப்பாரி வைக்க வேண்டாம் என்பதை இப்போதே சொல்லி வைக்கிறோம்.