எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளையும் ஆதரவாளர்களையும் தெளிவூட்டும் கூட்டம் ஒன்று நேற்று மாலை (7) கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்றது
திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
வேட்பாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.உவைஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளமன்றத் தேர்தலிலும் முஸ்லிம்கள் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களித்து மீண்டும் ஏமாறுவதை விடுத்து, இன்னும் ஐந்து வருட ஆட்சியில் பங்காளிகளாக மாற வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்கு கிழக்கு மாகாணத்திலே இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் நான் தான். இதன் மூலம் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் இக்கட்சியினால் கெளரவிக்கப்பட்டிருப்பது மாத்திரமன்றி, இக்கட்சியின் ஊடாக பாராளமன்றத்துக்கு ஒருவரை அனுப்புவதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். இதனை இந்த மாவட்ட முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தோடு இணைந்து செல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்தத் தேர்தல் அமைந்திருப்பதால், இதன் மூலம் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் சக வாழ்வையும் கட்டியெழுப்ப முடியும். அதனை இந்த மாவட்டத்தினூடாக தேசத்துக்கு கொண்டு செல்ல எமக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, விமலவீர திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியபதி கலபதி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன, தம்பலாகமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் என்.எம். சுபியான் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் டாக்டர் மஞ்சுள ஆகியோர் கலந்து கொண்டனர்.