மங்களவுடன் உரையாடலையடுத்து மனோ கணேசன்
முன்னாள் அமைச்சர் மங்கள சம
ரவீரவின் தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி. அவரது சிவில் சமூக பணியின் மூலம், இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு தான் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது,
இந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது. இது இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. அதேவேளை, இந்நாட்டில் சிங்கள சகோதர மக்களுடன் சகோதரத்துடன், அன்னியோன்யமாக ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழவே தமிழ் பேசும் மக்கள் இன்று விரும்புகிறார்கள். ஆனால், இந்த ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாகவும், சமத்துவமாகவும் வாழ விரும்பும் எங்களை நிராகரிக்கும் போக்கை அரசு சார்பு தீவிரவாதிகள் கடைபிடிக்கின்றார்கள்.
இந்நாட்டில் பெரும்பான்மை மக்களை தவறாக வழிநடத்த முயலும் இவர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி இப்போது தமிழ் பேசும் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்றது. இன்று இதற்கு விடை தர ஒரு சிங்கள பெளத்தரான மங்கள தன்னை தயார் செய்கிறார் என எனக்கு தெரிகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களின் மறுக்கப்படும் அரசியல் உரிமைகள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் கல்வித்துறை வாய்ப்புகள், தொழில் வர்த்தக துறை வாய்ப்புகள் ஆகிய எல்லாவற்றிலும், எல்லை மீறிய இடையூறுகள் அடுத்து வரும் ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும் சாத்தியங்கள் தெரிகின்றன.
இந்நாட்டில் நடுநிலையாக சிந்திக்கும் சிங்கள பெளத்த சிவில் சமூகத்தை ஒன்றுகூட்டி சிங்கள பெளத்த மக்களுக்கு உண்மைகளை, உலக நடப்புகளை எடுத்து கூறி, ஒரே இலங்கைக்குள், சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கும் பணியினை மங்கள செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இந்நாட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்காக இதை நாம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம்.
பாராளுமன்றத்தில், கட்சி அரசியலுக்குள் இருந்தபடி, இந்த சிவில் சமூக பணியினை தன்னால் செய்ய முடியாது என்றும், வெளியே இருந்தே தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியும் என்றும் உணர்ந்த காரணத்தாலேயே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக எனது நீண்ட நாள் நண்பர் மங்கள சமரவீர எனக்கு தெரிவித்தார்.