மஹிந்த இனவாதியோ, அதாவுல்லா பிரதேசவாதியோ அல்லர்- சட்டத்தரணி மர்சூம் மௌலானா கூறுகிறார்

நூருள் ஹுதா உமர்-

ஹிந்த ராஜபக்ஸ இனவாதியோ, அதாவுல்லா பிரதேசவாதியோ அல்லர் என்று வருகின்ற பொது தேர்தலில் திகாடுமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேசிய காங்கிரஸில் போட்டியிடுகின்ற ஆய்வாளர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.

நிந்தவூரில் உள்ள அவரின் இல்லத்தில் தேர்தல் கால கட்சி அலுவலகத்தின் திறப்பு விழாவோடு இணைந்த பிரசார கூட்டம் ஞாயிறு மாலை இடம்பெற்றபோது அங்கு மர்சூம் மௌலானா மேலும் பேசியவை வருமாறு

மஹிந்த ராஜபக்ஸவை இனவாதியாக காட்டி அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் அவரை தோற்கடித்தனர். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவை பிரதேசவாதியாக காட்டினர். அவரை பல வகைகளிலும் திட்டமிட்டு கடந்த பொது தேர்தலில் தோற்கடித்தனர். 

இருப்பினும் தோற்கடிக்கப்பட்டது அதாவுல்லா அல்லர். மாறாக எமது மக்களே ஆவர். ஆனால் கிழக்கு மண்ணில் இருந்து விதேசிகளை விரட்டி அடித்து வெளியேற்றுகின்ற கடைசி தேர்தல்தான் கண் முன் வந்து கொண்டிருக்கின்றது. நம்மை நாமே ஆள வேண்டும்.

பொதுவாக முஸ்லிம்கள் குறித்து விசேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள எமது மக்கள் குறித்து எந்த பிரக்ஞையுமே இல்லாதவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். முஸ்லிம் சமூகத்தை குறுகிய சுய இலாப அரசியலுக்காக புலிகளிடமும், நோர்வேயிடமும், ஐக்கிய தேசிய கட்சியிடமும் அடகு வைத்தவர். வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்று குறிப்பிடுவதற்குகூட நெஞ்சில் உரமும், நேர்மை திறனும் அற்றவராக இருந்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருக்கு எதுவுமே தெரியாது. மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டபோது முஸ்லிம்கள் யாரும் மதம் மாற மாட்டார்கள் என்று தூர நோக்கற்ற அறிக்கை மாத்திரம் விட்டவர்தான் ஹக்கீம். அவரின் அறிக்கையை தொடர்ந்து ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதை நடந்தேறியது. வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெறவில்லை என்றால் தமிழ் பேசும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிக்கை விட்டதைதான் நான் சொல்கின்றேன்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டு வந்தவர்கள்தான் நல்லாட்சி என்கிற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்தேச்சையாக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்கள் போன்றவற்றுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.அவற்றின் உச்ச கட்டமாகவேதான் சஹ்ரான் என்பவர் வந்து குண்டுகளை வெடிக்க வைத்தார். எத்தனையோ சம்பவங்கள் இந்நாட்டில் இடம்பெற்றபோதிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரையும் புலிகளாக அரசாங்கமோ, சிங்கள மக்களோ பார்த்ததில்லை. ஆனால் முஸ்லிம்கள் அனைவருமே பயங்கரவாதிகளாக பார்க்கப்பட்டனர்.

நல்லாட்சி என்கிற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து அநியாயங்களுக்கும் பிரதமர், சட்ட ஒழுங்கு அமைச்சர் என்கிற வகைகளில் பொறுப்பு கூற வேண்டியவராக ரணில் விக்கிரமசிங்க இருந்தார். முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற வேண்டிய ஜனநாயக தேவை முஸ்லிம்கள் தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இருந்தது. ஆனால் ரணிலை காப்பாற்றுவதுதான் ஜனநாயகமாக அவர்களுக்கு தெரிந்தது. ரணிலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர வேண்டியவர்களாக இருந்தவர்கள் அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

சிங்கள, பௌத்த கடுமை போக்கு சக்திகளின் எழுச்சி நடந்தேறுவதையும், அவை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திரும்பும் என்பதையும் பெருந்தலைவர் அஷ்ரப் அவருடைய இறுதி காலங்களில் கண்டு, ஊகித்த மாத்திரத்திலேயே தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். அது காலத்தின் தேவையாக அமைந்தது. பெருந்தலைவர் அஷ்ரப் விட்டு சென்ற இடத்தில் இருந்து அவரின் கொள்கைகளை இறுக பற்றி பிடித்து கொண்டு தொடர்ந்து பயணிப்பவராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா விளங்குகின்றார். எமது தலைவர் அதாவுல்லாவால் மாத்திரமே பெருந்தலைவர் அஷ்ரப்பின் இடத்தை நிரப்ப முடியும் என்பது திண்ணம் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -