கிழக்கில் இன்று அம்மன் குளிர்த்தி சடங்கு ஆரம்பம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை




 வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கில் இன்று(01) திங்கட்கிழமை வருடாந்த கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி வைபவத்திற்கான சடங்குகள் கொரோனா நெருக்கடி காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பமாகியது.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் இன்று(01) திங்கட்கிழமை கடல்தீர்த்தம் கொணர்ந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகியது.

கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்கு செல்லதடை விதிக்கப்பட்டிருப்பதனால் கல்யாணக்காலுக்கான கூறைச்சாறிகளை இன்று ஆலய நிருவாகத்தினர் தேரோடும் வீதிவழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சென்று சேகரித்தனர்.

மக்கள் சமகால நிலையை உணர்ந்து அம்மனுக்கான கூறைச்சாறிகளை கையளித்ததுடன் நேர்த்தி மடைப்பெட்டிகளையும் அவ்வாகனத்தில் கையளித்தனர்.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவம் இன்று ஜூன் 1ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 9ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.

இதேவேளை இம்முறை கொரோனா காரணமாக சடங்கு தொடர்பாக பலதீர்மானங்கள் காரைதீவு பிரதேச செயலர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. அவையாவன.

அங்கப்பிரதட்சணம் மற்றும் கற்பூரச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திகளுக்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் ஆலயத்துள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆலயக்கிரியைகள் சடங்குகள் யாவும் வழமைபோல் நடாத்தலாம். ஆனால் அனைத்தும் தேசிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நடைபெறல்வேண்டும்.

ஆலயத்துள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து(10)பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். ஆலயத்திற்கு வரும் அவர்கள் கட்டாயம் கைகழுவி மாஸ்க் அணிந்து சமுகஇடைவெளியைப்பேணவேண்டும்.

1ஆம் திகதி மாலை 5மணிக்கு இடம்பெறும் வழமையான கடல்நீர் எடுக்கும் நிகழ்வு மற்றும் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்விலும் அனுமதிக்கப்பட்ட 10பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. செல்லும் பாதையில் நிறைகுடம் வைப்பதில் தடையில்லை. ஆனால் மக்கள் கூடிநிற்பது தடைசெய்யப்பட்டள்ளது. இதற்கு பொலிசாரினதும் இராணுவத்தினரினதும் உதவி பெறப்படும்.

நேர்த்தி காவடிக்கு வாய்ப்பில்லை. மக்கள் ஊர்வலத்தின்பின்னால் செல்வதைத்தவிர்த்து வீட்டு வாயலில் நின்று அம்பாளைத்தரிசிக்கலாம்.

கல்யாணக்கால் நடும் வைபவம் அன்று இரவு குறித்த 10பேருடன் மாத்திரமே நடைபெறும். பக்தர்களோ யாரோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கல்யாணக்காலுக்கான சாறிகள் மடைப்பெட்டிகள் அடையாளங்கள் மடிப்பிச்சை போன்ற மக்களிடமிருந்து பெறப்படும் பொருட்களை ஆலய நிருவாகத்தினர் வீதிவீதியாகச்சென்று சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.மக்கள் அவர்களிடம் அவற்றை வழங்கலாம். ஆலயத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை.

சடங்கு இடம்பெறும் ஏழுநாள் தினப்பூஜைக்கும் அனுமதிக்கப்பட்ட 10பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மதியபூஜை பகல்12மணிதொடக்கம் 2மணிவரை நடைபெறும்.அதேபோல் மாலைநேரபூஜை மாலை5மணி தொடக்கம் 8மணி வரை நடைபெறும். இவை வழக்குரைக்காதை பாடல் குளிர்த்தி பாடல் அனைத்தும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்படும்.

தினமும் பச்சைகட்டலுக்கான பட்சணம் தயாரிப்பிலீடுபடுவதற்கு 5பேர் சுகாதாரவைத்தியஅதிகாரியின் அனுமதியுடன் அனுமதிக்கப்பவர். பறைமேளம் கொட்டும் இருவரும் அப்படியே அனுமதிபெறவேண்டும்.

அனுமதிக்கப்பட்ட 5தொண்டர்களால் ஊருக்குள்சென்று மடிப்பிச்சை சேகரித்து கொண்டுவரப்பட்டு உலரவைத்து ஆலயத்துள் 3உரல்களை 3 வேறு இடங்களில் வைத்து குற்றப்படும்.வழமையாக 1000 பானைகள் பொங்கி வைகாசிப் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால் அதற்குஇம்முறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. உள்பொங்கல் மாத்திரமே இடம்பெறும்.

9ஆம் திகதி இறுதிநாள் அதிகாலை குளிர்த்தி பாடும் சடங்கு வழமைபோல் இடம்பெற்றாலும் அதற்கும் குறித்த பத்துப்பேரே அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆலயசூழலிலும் கூடிநிற்கமுடியாது.

அதேபோல் எட்டாம் நாள் நடைபெறும் எட்டாம் சடங்கு கூட வெளியார் பொங்கலிலின்றி உள்பொங்கலுடன் மாத்திரம் நடைபெறும்.கடைத்தெருவுக்கு அனுமதியில்லை.
இந்த தீர்மானங்கள் யாவும் பிரசுரம் வடிவில் விநியோகிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -