கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா அவர்களினால் உயர் நீதி மன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் அலிஸாஹிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் ஆஜராகி, தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், , முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்டோர் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.
கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு உட்பட மற்றும் சிலரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.