சிலர் இன்னமும் இலக்கங்களில் தொங்கிக்கொண்டு மீளா வட்டத்துக்குள் முடங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும்– வேலுகுமார்


" தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவும், சுயதொழிலாளர்களாகவும் மாற்றுவதற்கான பரந்தப்பட்ட எண்ணக்கருவை நிறைவேற்றிக்கொள்வதற்கு பாடுபடவேண்டிய நிலையில், அத்திட்டத்தின் பெறுமதியை, முக்கியத்துவத்தை உணராமல் சிலர் இன்னமும் இலக்கங்களில் தொங்கிக்கொண்டு மீளா வட்டத்துக்குள் முடங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும்– என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி, கம்பளை தேர்தல் தொகுதியில் இன்று (30.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" நல்லாட்சியின்போது கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் ஏனைய மாவட்டங்களில்வாழும் மக்களுக்காக பல சேவைகளை வெறும் நான்கரை வருடங்களில் நாம் வெற்றிகரமாக செய்துமுடித்தோம். சலுகை அரசியல் நடத்தாமல் அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை சமாந்தரமாக முன்னெடுத்தோம்.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களை கைக்கூலி என்ற நிலையிலிருந்து விடுவித்து சிறுதோட்ட உரிமையாளர்களாக, தமிழ் விவசாயிகளாக, சுயதொழிலாளியாக மாற்றுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம். குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் இதற்கான பொறிமுறை அமுல்படுத்தப்படவிருந்தது.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வீடமைப்பு திட்டம் உட்பட மலையகத்துக்கான அபிவிருத்திகள் கிடப்பில் உள்ளன. இவற்றை செயற்படுத்துவதைவிடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணி என்ன செய்தது என கேள்வி எழுப்புவதும், ஆயிரம் ரூபா பற்றி மட்டும் கதைப்பதுமே அரசியலாக மாறியுள்ளது. இந்த அணுகுமுறையானது எமது சமூகத்தை நாமே சிறுமைப்படுத்தும் – மட்டந்தட்டும் செயலாகும்.
எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியால்தான் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். அதனை செய்துகாட்டிவிட்டே இன்று வாக்கு கேட்கின்றோம். பெருந்தோட்டத்துக்குள் மலையகத்தை முடக்க விரும்பவில்லை. தோட்டங்களுக்கு வெளியிலும் மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் காப்பதே எமது அரசியலாகும். அதேபோல் எல்லா சந்தர்ப்பங்களிலும் எமது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்தே செயற்பட்டுவருகின்றறோம்.
கண்டி மாவட்டத்தில் என்னால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரிரு திட்டங்களை செய்யாவிட்டால், அது பற்றி மட்டுமே விமர்சிக்கப்படுகின்றது. ஆனால், எனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு தெரியும். அதனால்தான் இன்று எனக்கான அணிதிரண்டுள்ளனர்." - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -