அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று முன்னிலையாக உள்ளார்.
அரசியல் பழிவாங்கள் குறித்து வாக்குமூலத்தை பதிவு செய்யும் வகையிலேயே, அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்றையதினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்டமா அதிபர் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தமது அதிகாரிகள் பங்கேற்க முடியாது என அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 16 ஆவது பிரிவின் கீழ் தமது அதிகாரிகள் குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதில் சிக்கல் உள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபெயரட்ன தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி சந்திர பெர்ணான்டோ ஆகியோர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.