பெரும்பாலும் இம்முறை நடைபெறும் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலே கடைசி கலந்துரையாடலாக இருக்ககூடும். - பாரத் அருள்சாமி தெரிவிப்பு



க.கிஷாந்தன்-


" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இலாபப்பங்கீட்டை வழங்கும் வகையில் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். எனவே, பெரும்பாலும் இம்முறை நடைபெறும் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலே கடைசி கலந்துரையாடலாக இருக்ககூடும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டியில் 30.06.2020 அன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

" பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச்சுமையைக்கருதியே ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடைசியாக நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்தது. கம்பனிகளும் சாதகமான பதிலை வழங்கியுள்ளன. எவ்வாறான சலுகைகள் வேண்டும் என கம்பனிகள் யோசனைகளை முன்வைத்த பின்னர் அவற்றை அரசாங்கம் செயற்படுத்தும். அதன்பின்னர் சம்பள உயர்வு கிடைத்துவிடும். எனவே, ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி. அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.

தொழிற்சங்கத்துறையில் அனுபவம் இல்லாதவர்களே வீண்விமர்சனங்களை முன்வைக்கின்றனர். கடந்தமுறை 500 ரூபாவாக இருந்த அடிப்படைச்சம்பளத்தை 700 ரூபாவாக்கினோம். அதாவது கூட்டு ஒப்பந்த வரலாற்றில் அடிப்படைச்சம்பளம் 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். இனியும் சம்பள உயர்வு தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படமாட்டாது என்றே நினைக்கின்றேன். ஏனெனில் பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இலாபத்தை பகிரும் முறை பற்றி கலந்துரையாடப்பட்டு வருகின்றது. எமது மக்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.

அதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே கண்டி மாவட்டத்தை இம்முறை கைப்பற்றும். அக்கூட்டணியின் சார்பில் ஒரேயொரு தமிழ் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஆதரவு வலுத்துவருகின்றது. முஸ்லிம் மற்றும் சிங்கள சகோதரர்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, மொட்டு மலரும். சேவல் கூவும் என்பது உறுதி.

கடந்த காலங்களில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் 90வீதமானவை முறையற்ற விதத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பில் இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். கண்டி மாவட்டத்துக்கும் அதிக வீடுகளை வழங்குமாறு கோரியுள்ளோம். மலையக எழுச்சி திட்டத்தின்கீழ் ஏற்கனவே ஆயிரத்து 500 வீடுகளை அமைக்க அடித்தளமிடப்பட்டுள்ளது. முழுமையானதொரு வீட்டுத்திட்டத்தை அமைப்பதே எமது திட்டமாக இருக்கின்றது.

கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தேன். நிலைபேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எனது எண்ணமாக உள்ளது. கல்வி, சமூகப்பொருளாதார அபிவிருத்தி, கலைக்கலாசாரம் மற்றும் விளையாட்டு ஆகிய நான்கு துறைகளும் கட்டியெழுப்படும்." - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -