வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்க முடியாது என, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக ராஜித சேனாரத்னவை பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், அவருக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவில் குறைப்பாடுகள் உள்ளதாகக் கூறி, குறித்த பிணை உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த உத்தரவை சவாலுக்குட்படுத்தி, ராஜித சேனாரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதற்கமைய, குறித்த மனு இன்றைய தினமும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும், ராஜித சேனரத்ன தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மனுவை தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான தேவையில்லை என ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.