பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் பின்தங்கிய 40 பாடசாலைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதிகளை வழங்கிவருகிறது.
நீண்ட கொரோனா விடுமுறைக்குப்பின் திறபடும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கோரக்கர் கிராமத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை வலயத்திலுள்ள கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் கே.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியத்தின் பிரதிநிதியும் வலயக்கல்விப்பணிமனை பிரதிநிதியுமாகிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டார்.
நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ கோரக்கர் அகோரமாரியம்மன ஆலய தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டார்.
முகக்கவசங்கள் கையுறைகள் டிஜிடல் உடல்வெப்பமானி கிருமிநாசினி தெளிக்கும்கருவி மேந்தலை எறியி புறொஜெக்டர் வெண்தாள்கள் உள்ளிட்ட தொகுதி பாடசாலைக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டது.
கலந்துகொண்ட ஆசிரியர் பெற்றோர்களுக்கு பாடசாலையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் வீட்டுநடைமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.