சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் பிரசார பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த நடவடிக்கைகள், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ், இன்று முதல் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வேட்பாளர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தவிர்ந்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களில் காணப்படுகின்ற ஸ்டிக்கர்கள் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொது இடங்களில் LED திரை மூலம் காட்சிப்படுத்தப்படுகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.