கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லை சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு எல்லையில் நிலவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் தெற்கு எல்லையில் நிலவும் குளறுபடி தொடர்பில் மறுமலர்ச்சி மன்றத்தின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை (10) மாலை, மாநகர முதல்வரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் எம்.எம்.நஸீர் ஹாஜி, செயலாளர் எம்.எம்.எம்.பைசால் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை என்பற்றுக்கிடையிலான எல்லை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சர்ச்சை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட கல்முனைப் பிரதேச சபையின் தெற்கு எல்லையின் பெரும் பகுதியொன்று, 2005 ஆம் ஆண்டு நிந்தவூர் பிரதேச சபையில் இருந்து காரைதீவு பிரதேச சபையை உருவாக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், அதற்குரிய ஆளுகைப் பகுதியாக குறிப்பிடப்பட்டு, எமது குடியிருப்பு மற்றும் வர்த்தக நிலபுலங்களும் வயல் காணிகளும் கபளீகரம் செய்யப்பட்டிருப்பதாக மறுமலர்ச்சி மன்றத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
கல்முனைப் பிரதேச சபையானது, 1998ஆம் ஆண்டு நகர சபையாக தரமுயர்த்தப்பட்ட போதும் 2001 ஆம் ஆண்டு மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்ட போதும் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்களிலும் அதன் தெற்கு எல்லை எவ்வித மாற்றமுமின்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கல்முனையின் தெற்கு எல்லையானது இவ்வாறு மூன்று வர்த்தமானி அறிவித்தல்களிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் காரைதீவு பிரதேச சபை உருவாக்கப்பட்டபோது, அந்த எல்லைக்குட்பட்ட பெரும் பகுதியொன்று திட்டமிட்டு அபகரிப்பு செய்யப்பட்டு, எமக்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்சினையை அடுத்த சந்ததி வரை விட்டு வைக்காமல், அவசரமாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்முனை மாநகர முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் தெற்கு எல்லையில் சர்ச்சை இருப்பது போன்று வடக்கு எல்லையிலும் நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், வடக்கு எல்லை தொடர்பில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அது போன்று தெற்கு எல்லை விடயத்திலும் செயற்பட முடியும் என்று குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் தெற்கு எல்லை தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துத் பேசுவதற்கும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்புவதற்கும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரை சந்தித்து பேசுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஏ.எம்.றகீப் இணக்கம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் எந்தவொரு ஆள்புல எல்லையையும் பாதுகாப்பதற்கு மாநகர முதல்வர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தின் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.