சுகாதாரஅதிகாரியை உடனடியாக மாற்றநடவடிக்கை வேண்டும்.
இன்று காரைதீவு பிரதேசசபையின் 28வது அமர்வில் தீர்மானம்.
காரைதீவு நிருபர் சகா-கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் காணிகளை சூட்சுமமாகச் சுவீகரிக்கும் ஜனாதிபதி செயலணி மற்றும் அச்செயலணியில் ஒரு தமிழ்பேசும் பிரதிநிதி நியமிக்கப்படாமை குறித்தும் கண்டனத்தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேசசபையின் 28வது மாதாந்த அமர்வு இன்று(11) வியாழக்கிழமை சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கூடியபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் பிரேரணையைச்சமர்பித்துரையாற்றுகையில்:
கிழக்கில் 248ஏக்கர்காணியை தொல்பொருள் என்றரீதியில் அபகரித்து பௌத்தபூமியாக்க சதி நடக்கிறது. தீகவாபியை சுற்றி 12ஆயிரம் ஏக்கர் அவர்களது பூமியாம். உரிமையாம்.
மூவினமக்களும் வாழும் கிழக்கில் இனமுறுகலை தோற்றுவித்து பௌத்த அடையாளமாக மாற்றும் இத்திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். என்றார்.
உறுப்பினர்களாக எம்.றனீஸ் எம்.ஜலீல் ஆகியோர் வழிமொழிந்துரையாற்றினர். இறுதியில் ஏகமனதாக இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் த.மோகனதாஸ் உரையாற்றுகையில்:
கொரோனா காரணமாக வீட்டுத்தோட்டம் செய்யச்சொல்லி அரசாங்கம் கூறியது. அதற்கிணங்கஎமது மக்கள் தோட்டம்செய்து அவற்றை அவர்களது வீடுகளுக்கு முன்னால் வைத்து விற்றதை பிஎச்ஜ வந்து தடைசெய்கிறார். வெள்ளரிப்பழத்தையும் தூக்கியெறிந்து தடைசெய்கிறார்.
இந்தக்கொரோனா காலகட்டத்தில் நான் மூவரை அமர்த்தி மரக்கறி விற்பனைசெய்தேன். அன்று வந்த பி.எச்.ஜ. உடனடியாக எழும்பு என்று கோபத்துடன் மரக்கறிகளை அள்ளிவீசினார். எமக்கு முன்கூட்டியே கூறியிருந்தால் நாம் ஏதாவது ஏற்பாட்டைச் செய்திருப்போம்.
அதைவிடுத்து அள்ளிவீசி அராஜகம் செய்கிறார்.கேட்டால் பிரதேசசபைதான் எழுப்பச்சொன்னது என்று பொய் சொல்கிறார். எமது அதிகாரத்திற்குட்பட்ட அங்காடிக்கடையை அகற்ற சுகாதாரவைத்தியஅதிகாரிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எனக்கு அதனால் 1லட்சத்து 80ஆயிரம் ருபா நட்டமேற்பட்டுள்ளது.
இந்டைமுறை காரைதீவுக்கு மட்டும்தானா? கல்முனையில் சாய்ந்தமருதில் நிந்தவூரில் இல்லை. அங்கு அங்காடி வியாபாரம் தாராளமாக நடக்கிறது. அந்த சுகாதார அதிகாரிக்குக்குத் தெரியாத சட்டம் இவருக்கு மட்டும் தெரிந்ததா? இது ஏன் இந்த பாரபட்சம்? அநீதி?
ஒருநாள் பிரதான வீதியிலுள்ள ஆட்டுக்கடையில் ஒரு குட்டிஆடு வெட்டப்பட்டதை அவதானித்தேன். அதற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அருகிலிருந்த 3ஆடுகளுக்கு சீல் இல்லை. அது கள்ளஆடுகளாக இருக்கலாம். இவற்றை இந்தச்சுகாதாரப்பகுதியினர் கண்டும்காணாமல் உள்ளனர். அவர்களுக்குரிய கடமைகளை சரிவரச்செய்யாமல் எமது அப்பாவி மக்களின் மாம்பழம் வெள்ளரிப்பழம் விற்பதைத் தடைசெய்கிறார்.
எம்மோடு ஒத்துழைக்காமல் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டு சுகாதாரச்சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் அந்த சுகாதாரஅதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும். அல்லது மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திப் போராடுவார்கள். என்றார்.
அதற்காதரவாக சுயேச்சை உறுப்பினர் இ.மோகன் மு.காண்டீபன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
இறுதியில் தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்:
பிரதேசசபையின் அதிகாரத்தை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாகச் செயற்படும் காரைதீவு பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும். அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என நீங்கள் பலரும் கேட்டிருந்தீர்கள்.
அவர் காரைதீவில் மாத்திரம் அன்றாடம் விளையும் மரக்கறிகளை விற்கும் அங்காடி சிறுவியாபாரிகளைத்தடை செய்து நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு நாம் பொறுப்பல்ல. எமது பெயரைப்பயன்படுத்தியே அங்காடிக்கடைகளை எழுப்பியுள்ளார். இது எமது அதிகாரம். அதனை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
எமது அதிகாரத்தை யாரும் கையாள அனுமதிக்கமுடியாது. எமது ஆளுகைக்குட்பட்ட கடைகள் அங்காடிக்கடைகளை எழுப்ப அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரது செயற்பாட்டை வன்மையாகக்கண்டிக்கிறேன்.
கொரோனா காலகட்டத்தில் பலகூட்டங்களை நாம் கூட்டியிருந்தோம்.தொலைபேசி மூலம் அல்லது எழுத்துமூலம் பலதடவைகள் அழைப்பு விடுத்தும் அவர் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதில்லை. பிரதேசசெயலரும் நாமும் இணைந்தே கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபடநேரிட்டது.
கொரோனவில் அர்ப்பணிப்பானசேவைசெய்த சுகாதாரத்துறையினரை பாதுகாப்புத்துறையினரை நாம் மதிக்கிறோம்.பாராட்டுகிறோம். ஆனால் மக்களுக்கு சேவைசெய்யாத சுகாதாரசீர்கேட்டுக்குவழிவகுக்கும் இத்தகைய சுகாதார அதிகாரியை வெறுக்கிறோம். கண்டிக்கிறோம்.
குறித்த அதிகாரி தொடர்பில் ஏற்கனவே பிராந்திய மற்றும் மாகாண சுகாதாரப்பணப்பாளர்களுக்கு பலதடவைகள் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் நாட்டின் சுகாதார அமைச்சர் பிரதமர் ஜனாதிபதி ஆகியோருக்கு சபையால் கடிதம் அனுப்பிவைக்கப்படும் என்றார்.