நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையில் மாணவர்களின் கல்வியும் பாரியளவில் பாதிப்படைந்தது.
குறிப்பாக கொரோனா என்ற வைரஸ் நோய் பரவுகின்றது என்ற அடிப்படையில் மாணவர்களையும், மக்களையும் பாதுகாக்கும் வகையில் முதற் கட்டமாக அரசாங்கம் சகல பாடசாலைகளும் உடநடியாக கால வரையறையின்றி மூடியதுடன் படிப்படியாக அரச, தனியார் துறைகள், பொக்குவரத்துக்கள் என சகல நடவடிக்கைகளும் நோய்ப் பாதுகாப்பிற்காக முடக்கப்பட்டதையும் மக்களை ஒன்று கூடாதவாறு ஊரடங்கையும் அமுல்படுத்தியது.
குறிப்பாக கொழும்பு, ஹம்பஹா உள்ளிட்ட இடங்களில் சுமார் 66 நாட்கள் தொடர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் அரச நிறுவனங்களை ஓரளவு இயக்கும் வகையில் வீட்டில் இருந்தவாறு இணையத்தளம், தொலைபேசி போன்றவையூடாக கடமையாற்றுமாறு அதிகாரிகளையும், ஊழியர்களையும் அரசாங்கம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அந்த நடைமுறை இன்றுவரை நடைபெற்று வருகின்றது.
இதுபோன்று அரச மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர்களையும் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வட்ஸ்அப் மற்றும் சூம் தொழிநுட்பம் ஊடாக பாடங்களைப் போதிக்கும் செயல்திட்டமும் அமுல்படுத்தப்பட்டது.
இந்த கற்பித்தல் நடவடிக்கைகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதுடன் கணிசமான ஆசிரியர்கள் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது.
இதில் சில குறைபாடுகளும் இருந்துள்ளதை மறுக்க முடியாது அதாவது ஆசிரியர்கள் நேர அட்டவணை கொடுக்கும்போது ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மாணவர்களுக்கு அதே நேரம் வகுப்புக்கள் இருந்துள்ளதுடன் ஐ போன் வசதிகள் பல மாணவர்களிடம் இல்லாததும் ஒரு காரணமாக இருந்ததுடன் ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று மாணவர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களில் ஒரு மாணவரே கற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளும் காணப்பட்டன.
இது இவ்வாறிருக்க ஒருசில ஆசிரியர்கள் ஒன்லைன் மூலம் சூம் வகுப்புக்களுக்கு பணம் கட்டினால் சேரலாம் என்று அறிவித்து வங்கியில் பணம் வைப்பில் இட்ட பிறகு பாஸ்வேட் வழங்கி பாடங்களை ஆரம்பித்துள்ளனர்.
விடுமுறை காலத்தில் வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் இவ்வாறு பாடங்களை கற்பித்து விட்டு பெருமளவான பணம் பெறுவதென்பது நியாயமற்ற விடயமாகும். இந்த நாட்டில் இலவசக் கல்வி என்ற போர்வையில் இவ்வாறான கல்வி வியாபாரம் நியாயமற்றது என பெற்றோர் கவலை கொள்கின்றனர்.
இச்செயற்பாடுகள் மாணவர்களுக்கு வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
இணையச் செலவுகள் என்ற வகையில் ஒரு மாணவரிடம் 200.00 அல்லது 300.00 ரூபாய்கள் அறவிட்டிருந்தால் அது நியாயமானது என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 1500.00, 2000.00 என்றால் குறைந்தது 100 மாணவர்கள் என்றால் கணக்கிட்டுப்பாருங்கள்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இவ்வாறான ஆசிரியர்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
அதிகமான மாணவர்கள் வருமாணம் குறைந்த குடும்பங்களில் உள்ளவர்கள் அதுவும் கடந்த அசாதாரண சூழ் நிலைiயில் பல பெற்றோர் தொழில் இன்றி வீடுகளில் முடங்கிக்கிடந்து கையில் இருந்தவை முடிந்த பின்னர் மற்றவர்களின் கையை எதிர்பார்த்தவர்களாக கண்ணீருடன் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அந்தளவுக்கு கடந்த மூன்று மாதங்கள் அன்றாடம் கூலித் தொழில் செய்தும் ஏனைய வியாபாரம் செய்தும் வாழ்க்கை நடாத்தும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாரிய பொருளாதார அவலத்திற்கு ஆளாகியிருந்தனர்.
இவ்வாறு கஸ்டத்தில் இருக்கும் பெற்றோர் உணவிற்கோ வழியில்லாதபோது எவ்வாறு பெருமளவான தொகையை மாணவர்களின் கல்விக்கு செலுத்த முடியும்?.
எனவே இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நடவடிக்கைகளில் நியாயமாக நடந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும். ஒருசில ஆசிரியர்கள் ஏனைய மாணவர்களுக்கு இலவசமாகவும் கல்வி கற்றுக் கொடுத்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டுவதுடன்.
இது யாரையும் பழிவாங்கும் வகையில் தெரிவிக்கப்படவில்லை.
பல கஸ்டப்பட்ட மாணவர்களின் நலன் சார்பாகவே இத்தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.