மருதமுனை மக்களின் தேவையை நன்றாக அறிந்து அதனை தீர்க்கும் வல்லமை பெற்றவராக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா இருந்திருக்கிறார். அவர் அக்கறைப்பற்றுக்கு செய்த சேவைகளை போன்றே அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் சேவை செய்திருக்கிறார். அவர் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து கடந்த 5 வருடங்களும் ஓய்வெடுத்த போது இந்த சமூகம் பட்ட இன்னல்கள் கடுமையாக இருந்தது என இலக்கம் இரண்டில் குதிரை சின்னத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரசின் சட்டவிவகார கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
பெரியநீலாவணை பகுதியில் இன்று (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜய்க்கா திட்டத்தின் மூலம் மருதமுனை வீதிகளில் அதிகமானவற்றை செப்பனிட காரணகர்த்தாவாக இருந்தவர் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களே. அவர் அதிகாரத்தில் இருந்த போது பிரான்ஸ் சிட்டி கிராமத்தை உருவாக்க காணிகளை நிரப்பித்தந்தது மட்டுமின்றி சுனாமியால் பாதித்த மக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டிய ஒருவராக இருந்தார். குடிநீரை இலகுவாக பெற வேண்டும் எனும் நோக்கில் தண்ணீர் தாங்கி அமைத்து தந்த தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களே பல பாடசாலைகளின் கட்டிடங்களையும் எமக்காக தந்தார்.
மார்க்க அறிஞர்களை உருவாக்கும் அந்நஹ்லா அரபுக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றை தந்த தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் எத்தனையோ எமது பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சதமெனும் பெறாமல் தொழில் வழங்கியுள்ளார். இப்படியாக தனது இறக்க குணத்தை தொடர்ந்தும் எமது மருதமுனைக்கு காட்டிக்கொண்டிருக்கும் அவர் குறைந்தளவு வாக்குகளை மட்டுமே வழங்கிய எமது மண்ணை கௌரவித்து மாகாணசபை உறுப்பினர் பதவியையும் தந்து அழகுபார்த்தார்.
இப்போதைய மாநகர சபையின் முதலாவது தேசிய காங்கிரஸ் உறுப்பினராக எமது மண்ணுக்கே அவர் முக்கியத்துவம் தந்தார். இப்படியாக அவர் எமது மாவட்டத்தின் ஒவ்வொரு ஊருக்கும் தனது அதிகாரத்தை கொண்டு உச்ச சேவைகள் வழங்கி வரலாறு படைத்துள்ளார். அவருக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தும் தேர்தலாக இந்த தேர்தலை பயன்படுத்த மருதமுனை மக்கள் தயாராக இருப்பதுடன் வெற்றிகரமாக செய்து முடிக்க முன்வர வேண்டும்.
அவரது பாராளுமன்ற பிரதிதிதித்துவம் இல்லது போனவுடன் அதிகமாக பாதிக்கப்பட்டது நமது பிரதேசங்களே. எமது பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளை தீர்த்து ஒற்றுமையாக எமது சமூகம் வாழ் நாங்கள் ஒன்றிணைந்து தேசிய காங்கிரஸை ஆதரிக்க முன்வரவேண்டும். எமது மண்ணுக்கான அதிகாரங்கள் எம்மை வந்தடைய நாங்கள் இனியும் ஏமாற்று வித்தைகளுக்கு சோரம்போக கூடாது என்றார்.