கலாநிதி ஷுக்ரி ஒரு முன்மாதிரி ஆளுமை



'வழித்தடம்' - All University Muslim Student Association
A.L.F.Nuskiya
South Eastern University of Sri Lanka
மூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி வாழ்ந்து மறைகிறார்கள் அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களது மறைவோடு நினைவுகளும் மறக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்குக் காலம் சிலர் தோன்றுகின்றார்கள். அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணிப்புக்கள் செய்து தங்களது தனிப்பட்ட வாழ்வை அர்ப்பனித்தவர்கள் அவ்வாறு அர்ப்பனித்தவர்களில் ஒருவர்தான் கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம் சுக்ரி அவர்கள்.
மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியவர்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி,சமூக,கலாசார வரலாற்றுத் துறைகளில் அவர் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கியிருக்கிறார்.
இனிமையான கருத்துக்களைக் கொண்ட சிறந்த பேச்சாளரான இவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர் இவற்றையெல்லாம் சுருக்கிக் கூறின் இவர் ஒரு அறிவுக் கடல் என்றால் அது மிகையாகாது. சமய இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமின்றி,பிற நாட்டு சஞ்சிகைகள் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதுமாத்திரமன்றி பல்வேறு சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.அவர்களது ஆற்றலுக்கான உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன.
அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகத் தெளிவாக புரிய முடியும். 1978 ஒக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும்,அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆக்கங்களை எழுதியுள்ளார். கலாநிதி சுக்ரியின் தனிச்சிறப்பு எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்தது, இயக்கச் சாயம் எதுவுமே இல்லாது,அவரது கருத்துக்களை எல்லா தரப்பினரும் ஈர்க்கும் வகையில் செயலாற்றியதேயாகும்.
அன்னாரிடம் இஸ்லாமிய எழுச்சி குறித்த தெளிவான பார்வையும் தூரநோக்கும் இருந்தது.
இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய கலாபீடமான பேருவளை ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளராக தனது இறுதி மூச்சுவரை பணியாற்றிய இவர், இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர் அவரது மாணவர்கள் இன்று சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் மிளிர்ந்து வருகின்றனர்.நளீமியாவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்.
ஒரு பல்கலைக்கழகத்திற்கு ஒப்பான தரத்தில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நளீமியா கலாபீடமானது நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களையும் கல்வியியலாளர்களையும் உருவாக்கியுள்ளது.இன்று அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவம் மிக்க பதவிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றி வருகின்றார்கள். இத்தகைய கலாபீடம் ஒன்றை உருவாக்கிய உயரிய பணியை சமூகத்திற்க்காக நிறைவேற்றிய இந்த உத்தமர் இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் கலாநிதி சுக்ரி அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்.அதற்காக பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்தவும் அரும்பாடுபட்டவர் அதுமாத்திரமின்றி இலங்கை முழுவதிலுமுள்ள வறிய மாணவர்களின் கல்விக்காக நளீம் ஹாஜியாரின் புலமைப்பரிசில் திட்டத்தை சிறந்த முறையில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியவர் களில் கலாநிதி சுக்ரியே முதன்மை வகிக்கின்றார் இந்த உதவித்திட்டத்தின் மூலம் வடமாகாணத்தில் இருந்து வெளியேறி,தென்னிலங்கையில் வாழ்ந்த அகதி முஸ்லிம்கள் பெரும் நன்மை அடைந்தமையை இங்கு நினைவு கூர்வது மிகவும் நன்றியுடையது.
மேலும் நளீமியா கலாபீடத்தின் உருவாக்கத்திற்காக நளீம் ஹாஜியாருடன் அயராது உழைத்து சுமார் 50 வருடங்களாக அதன் பணிப்பாளராகவும் பணியாற்றிய இவர் இஸ்லாமிய தஃவாப் பணிகள் உட்பட சமூகத்திற்கான அவரின் பூர்வீக வரலாற்று ஆய்வுப் பணிகள் போன்ற நற்காரியங்களில் முன்னின்று உழைத்தவராவார்.முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்குப் பெரிதும் பங்காற்றிய இவர் பல கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கிய ஒரு உன்னதமான மனிதராவார்.
கலாநிதி சுக்ரி அவர்கள் நன்றி உணர்வு கொண்ட ஆளுமையாக காணப்பட்டார்.அவரது மேடைப் பேச்சுகளின் போதும். அவரது சஞ்சிகைகள் மூலமும் தன்னை சிறுவயதிலிருந்து ஆற்றுப்படுத்தி வளர்த்துவிட்டவர்களை தனது ஆசான்களை நன்றி உணர்வுடன் என்றும் நினைவு கூறக் கூடிய ஓர் முன்மாதிரி ஆளுமையாகக் காணப்பட்டார்.
சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியான கல்வியாளராக தூரநோக்கு சிந்தனையாளராக வாழ்ந்து மறைந்திருக்கின்ற பல்துறை ஆளுமை பல ஆளுமைகளை சமூகத்திற்க்கு உருவாக்கித் தந்த மாபெரும் ஆளுமை சமூகத்திற்காக வாழ்ந்து தனக்காக எதையும் சேர்க்காமல் சமூகம், சமூகம் என்று வாழ்ந்து ஓர் மிகப் பெரிய ஆளுமையின் இழப்பு மிகவும் வருத்தத்துக்குரியதே அல்லாஹ் அவரது சமூகப் பணிகளையும் நல் அமல்களையும் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக.ஆமீன்!!.

செய்தியாளர்: அfப்ரா அன்சார்-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -