“நாடு முகங்கொடுத்துள்ள சுகாதாரப் பிரச்சினை ஒரு பெரும் பொருளாதாரப் பிரச்சினையாக மாறிவிடுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோளப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது.
உலகின் பெரிய, சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள் இந்த பிரச்சினையை வெற்றிகொள்வதற்குப் பல்வேறு வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எமது மத்திய வங்கியிடமிருந்து அவ்வாறான எந்தவொரு நல்ல பதிற்திட்டத்தையும் நான் கிடைக்கப்பெறவில்லை.
பிரச்சினையை வெற்றிகொள்வதற்குச் செய்ய வேண்டியதை எவ்வித தாமதமுமின்றி எனக்கு அறியத் தாருங்கள்” என நான் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு இன்று நான் தெரிவித்தேன்.
பொருளாதாரப் புத்தெழுச்சிக்காக அரசாங்கம் அதன் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. அதற்கு மத்திய வங்கியின் உதவி இதுவரை கிடைக்கவில்லை. எனவே, அதற்கான காரணத்தை எனக்கு விளக்குமாறும் நான் இன்று அவர்களிடம் வேண்டினேன்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மூத்த மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே நான் இதனைத் தெரிவித்தேன்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளினதும் மேலும் பல சிறிய நாடுகளினதும் மத்திய வங்கிகள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பொறிமுறைகளை முன்வைத்துள்ளன. எனினும் எமது நாட்டின் மத்திய வங்கி பொருளாதாரப் புத்தெழுச்சிக்காக எவ்வித முன்மொழிவையும் இதுவரை முன்வைக்கவில்லை.
கடந்த சில வருடங்களாக - பல நிறுவனங்களிடமிருந்து நாட்டுக்காகப் பெற்றுக்கொண்ட சேவைகள் மற்றும் உற்பத்திகளுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை அவர்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பிணையாக வைத்துக்கொண்டு, தமது தொழில்களை முன்னேடுப்பதற்காக அவர்கள் வங்கிகளில் கடன்களைப் பெற வசதியாக - 150 பில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளை வங்கிகளுக்கு வழங்குமாறு நான் முன்வைத்த முன்மொழிவை மத்திய வங்கி நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவு குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றது.
மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இன்னும் தமது பதவிகளில் உள்ளனர். அந்த பாரிய மோசடிக்கு உதவிய இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவாது இருப்பது குறித்து நான் அதிருப்தி தெரிவிக்கின்றேன்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் எனக்கு மிகப்பெரும் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டினை நான் கொண்டிருக்கின்றேன் என்பதனையும் நான் அதிகாரிகளுக்கு நினைவூட்டினேன்.
சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை இணைந்து கொவிட் நோய்த்தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகப் பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளனர். அதே சமயம் - நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நான் பரிந்துரைத்த யோசனைகளுக்குக்கூட மத்திய வங்கி தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினைகளின் தீவிரத்தை விளங்கிக்கொண்டு மிக விரைவாக மத்திய வங்கி தனது முன்மொழிவுகளை, அல்லது எனது முன்மொழிவுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பதனை நான் அதிகாரிகளிடம் இன்று வலியுறுத்தியதுடன் - இது இன்றைய தினமே செய்யப்பட வேண்டும் ன்றும் நான் குறிப்பிட்டேன்.
எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் ஆகியோரும் மத்திய வங்கியின் அதிகாரிகளும் இன்றைய கலந்துரையாடலில் பங்குபற்றினர்.