இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

தலவாக்கலை பி.கேதீஸ்-

ஜூலை மாதம் 6ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளில் செயல்படுத்த வேண்டிய தேவையான சுகாதார நடவடிக்கைகளையும் முன்னாயத்தங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமார் மூன்று மாதங்கள் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. தற்போது நாட்டில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆளணியினர் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

அதன் பின்னர் ஜூலை மாதம் 6ஆம் திகதியே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் அன்றிலிருந்தே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

எனவே அதற்கு முன்னதாகவே சகல சுகாதார நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியை பெற்றுக்கொடுப்பதற்கென மேலும் 116 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். அத்துடன் சகல பாடசாலைகளிலும் கட்டிலுடன் கூடிய ஓய்வறையொன்றை அமைக்கவும் முகக்கவசங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை. அதிலும் ரூபா 11500 உடல் வெப்பநிலையை அளவிடும் கருவி ஒன்றுக்கு அறவிடப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதியை அரசாங்கம் ஒதுக்க முன்வரவேண்டும். பாடசாலை நிர்வாகம் எக்காரணத்திற்காகவும் பெற்றோர்களிடமிருந்து பண அறவீடு செய்ய முடியாது. உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தற்போது 7000 பாடசாலைகளில் மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்கு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சமைத்த உணவுகள் வழங்க கூடாது என சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றீடாக உலர் உணவுகளை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டம் ஒன்று அவசியம். மாணவர்களின் பாதுகாப்பிற்கென வழங்கப்பட்டுள்ள சகல சுகாதார ஆலோசனைகளும் பின்பற்றப்படவேண்டும்.

எல்லா மாணவர்களையும் ஒன்றாக அழைத்து பாடசாலைகள் நடாத்த இயலாது. சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவேண்டும். கட்;டாயமாக சமூக இடைவெளிகளை மாணவர்கள் பேண வேண்டும். அதற்கான அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களையும் கல்வி அமைச்சு நடாத்த வேண்டும். பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பான இடமாக கற்றல்,கற்பித்தல் செயன்முறைக்காக தயார்படுத்த வேண்டும். மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருவதற்கு முன்னதாகவே (ஜீலை 6ம் திகதிக்கு முன்னர்) பாடசாலைகளில் செயற்படுத்தப்பட வேண்டிய சகல சுகாதார நடவடிக்கைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -