இலங்கைத்திருநாட்டின் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே என்பதை எமது தமிழ்மக்கள் தொடர்ச்சியாக நிருபித்துவருகிறார்கள்.இம்முறையும் அதனை அதீதமாக நிருபிப்பார்கள் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்
அவர் தனது இரண்டாவது தேர்தல் பிரச்சாரத்தினை நாவிதன்வெளி சவளக்கடைப் பிரதேசத்தில்
ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில் :
பேரினவாத சக்திகளின் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர் இவ்வாறானவர்களை இனங்கண்டு நடைபெறவுள்ளதேர்தலில் தமிழ்மக்கள் தகுந்த பாடத்தினைப் புகட்டுவார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை சலுகைகளை நம்பி ஏமாந்துபோகும் மானம்கெட்டவர்கள் அல்ல.ஓரிரு புல்லுருவிகள் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.ஆனால் கௌரவமாக தமிழ்மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்க் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக செய்கிறார்கள்.தமிழர்கள் மன்ஙகளல் நிறைந்துள்ள கட்சி அது மாத்திரமே என்பதை உலகமே அறியும்.
தமிழ் மக்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்த்தேசிக் கூட்டமைப்புதான். தமிழர்களையும் அவர்களது அடையாளங்களையும் பாதுகாப்பதற்காக சர்வதேசம் வரை குரல் கொடுத்துவருகின்றனர் இது வேறு எந்த சுயலாப நபர்களாலும் முடியாது.
இன்று சிலர் தமிழர்களை மடையர்களாக்கலாம் என்ற எண்ணப்பாங்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கவேண்டும் என்று வந்தவர்கள் தாமும் ஒரு கட்சியை உருவாக்கி செல்லாக்காசாகியுள்ளனர்.இன்னும் சிலர் தாவுவதற்கு கட்சிகளே இல்லை. இனி அவர்கள் பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரசிற்குத்தான் போகவேண்டும்.அவர்களது அந்த பிரச்சாரங்கள் யாவும் வாய்ப்பேச்சாகவே இருக்குமே தவிர வேறு ஏதும் ஆகாது.
தமிழ் மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருப்பது முதலில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களுக்கான நியாயமான அரசியல் தீர்வும் அதனோடு இணைந்ததாக கல்வி பொருளாதாரம் என்பவற்றையும் கட்டி எழுப்பவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.என்றார்.