இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வறுமை-தீர்க்கப்பட வேண்டியதொரு உள்வீட்டு பிரச்சினை.


'வழித்தடம்'- All University Muslim Student Association
R.S Rifna
University of Jaffna
“தான் நாடியோருக்கு செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும்,குறைத்தும் வழங்குகின்றான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.”
(அல்குர்ஆன் 17:30)
மேற்படி அல்குர்ஆனின் வரிகளுக்கிணங்க சர்வ உலகை படைத்த இறைவன் தான் நாடியோரை செல்வந்தர்களாகவும்,தான் நாடியோரை வறுமையுற்றோராகவும் ஆக்கியுள்ளான்.ஹவறுமை’ என்ற வார்த்தையை கூட வெறுப்பாக எண்ணும் இன்றைய சமூக சூழ்நிலையில்; சோதனை கஷ்டங்கள் அற்ற நிம்மதியான வாழ்வையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.வறுமைக் கோட்டிற்குட்பட்டோருக்கான தீர்வுகள் மட்டும் சரியான விதத்தில் பெறப்படுவதில்லை என்பதே தற்கால இலங்கை முஸ்லிம் சமூத்தின் நிதர்சனம்.
இதே நோக்கிலேயே இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வறுமை போக்கு தீர்க்கப்பட வேண்டிய உள்வீட்டு பிரச்சினையாக மாறியுள்ளது.இஸ்லாத்தின் அடிப்படையில் வறுமையின் காரணமாக மனித சமுதாயம் தடம் புரண்டு விடக் கூடாது என வல்ல இறைவனும்,இறுதி நபியும் அல்குர்ஆனிலும், சுன்னாக்களிலும், ஹதீஸ்களிலும் அழகிய வழிகாட்டுதல்களை விட்டுச் சென்றுள்ளனர்.இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் காணப்படும் வறுமை பிரச்சினைக்கான தீர்வுக்களை இஸ்லாமிய அடிப்படையிலான ஸகாத்,ஸதகா,வாரிசுரிமை சட்டங்கள் போன்ற செயற்பாடுகளின் பக்கச்சார்பற்ற சுன்னா அடிப்படையான வழிமுறையில் ஓரளவு தீர்க்கப்படக் கூடியதாக உள்ளது.

எமது நாட்டு சமூக அடிப்படையில் நோக்கும் போது வறிய நிலையில் உள்ளோருக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதில் பெருமளவில் பக்கச்சார்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.வெறுமனே வெளியுலக புகழுக்கான ஸதகாக்களும்,முறையற்ற ஸகாத்துக்களும் ஒருபோதும் எம் சமூகத்தின் வறுமைக்கான தீர்வாக அமைந்து விடப் போவதில்லை! இடது கை அறியா தர்மத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாம் புகழையும், பெயரையும் ஒரு போதும் வலியுறுத்தவில்லை.

செல்வம் சமூகத்தின் எல்லா தரப்பினரிடையும் சுழன்று கொண்டு இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய அடிப்படையாகும். சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் எவராலும் வறுமையையும், வறுமையால் பாதிக்கப்படும் தனிமனித வாழ்வியலையும் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூட வறுமையிலிருந்து பாதுகாப்பு தேடியுள்ளார்கள். காரணம், வறுமை மனிதனை தடம் புரள வைக்கக் கூடியது. ஷைத்தானின் தீங்கின் பால் இட்டுச்செல்லக்கூடியது. இஸ்லாம் வறுமையையும், இறை மறுப்பையும் இணைத்து பேசியிருப்பதே இதற்கு தக்க சான்றாகும்.
இலங்கையை பொறுத்த வரையில் குறிப்பிட்ட சமூகங்களுக்கிடையிலான வறுமைப் போக்கானது முடிவிலா முடிவை நோக்கி நகர்ந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும். குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திலோ, சமூகத்தினரிடையோ மிகவும் வறுமைக்குட்பட்டோர் என இனங்காணப்படும் குறித்த குழுவினர் மாத்திரம் காலந்தோறும் தொடர்ந்து நிவாரணங்களையும், உதவிகளையும் பெறுமிடத்து, நடுத்தர அளவிலான வருமானம் பெறும் குடும்பங்களில் ஸகாத், ஸதகா, வாரிசுரிமை சட்டங்களுக்கு உரித்தானோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இது இறைவழிகாட்டலின் அடிப்படையிலான செயல் அன்று.

மேலும், வறுமைத்தீர்ப்புக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் புரிந்துணர்வுக் தன்மையோடு, நியாயமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் வெளியில் சொல்லவும் முடியாமல், தனித்து தமது வறுமை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் முடியாமல் வாடும் எம்மில் பல குடும்பங்களில் வறுமை காரணமாக ஏற்படும் ஏதேனுமொரு பிரச்சினைகளை தீர்க்கக்கூடியதாக இருக்கும். இதற்கு மஸ்ஜித்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூகத்திலுள்ள செல்வந்தர்கள் போன்ற சமூக அமைப்பாளர்கள் தமது முழு ஆதரவையும் வழங்க முயற்சிக்க வேண்டும்.

இன்றைய சமூகத்தினரிடையே முஸ்லிம் இளந்தலைமுறையினர் என்ற ரீதியில் நோக்குகையில் தற்கால சட்ட நடைமுறைக்கு முரண்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட வறுமை ஒரு காரணமாக அமைகிறது. முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இது ஒவ்வொருவரும் பொறுப்பு கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையாகக் கொள்ளலாம். ஏனெனில், வறுமையிலிருந்தும் குப்ரிலிருந்தும் நபியவர்கள் கூட பாதுகாப்பு தேடியுள்ளார்கள். காரணம், வறுமை பாவத்தின் பக்கமும், இறை நிராகரிப்பின் பக்கமும் இட்டுச் செல்லக் கூடியது. ஒரு சமூகத்தின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமையும் வறுமையை அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆக்கியுள்ளான்.

மேலும்,
“(அவ்வாறே) வானங்கள் மற்றும் புவியிலுள்ள அனைத்தையும் அவன் தன்னுடைய அருளினால் உங்களுக்காக வசப்படுத்தியிருக்கிறான்’’(அல் ஜாஸியா-13)
இவ்வாறு, அல்லாஹ் மனிதனுக்கு இப்பிரபஞ்சத்தை வசப்படுத்திக் கொடுத்திருந்தாலும் தன் தேவையை நிறைவு செய்து கொள்ள முடியாதவனாகவே மனிதன் இருக்கிறான். அந்த வகையில், இஸ்லாம் வறுமையின் கோரப்பிடியில் இருந்து மனிதனை விடுவிப்பதற்கான சிறந்த நடைமுறையைக் கொண்டுள்ளது.
ஆகவே, வறுமை எனும் சோதனை எம் சமூகத்தினரிடையே தீர்க்கப்பட வேண்டும். வுறியவர்கள் இனங்காணப்பட்டு உதவிகள் வழங்கப்பட வேண்டும். இஸ்லாம் வறுமையை இழிவாக கருதும் மார்க்கமன்று. அதில் அழகிய அத்தாட்சிகள் உண்டு. நல்ல பல தீர்வுகள் சுன்னாக்களில் உண்டு. இவற்றை கருத்தில் கொண்டு சிறந்த நடைமுறைகள் பேணப்பட வேண்டும். ஸக்காத்துக்கள் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டும். வல்ல நாயன் வாரி வழங்குவோருக்கு நல்லருள் பாலிப்பானாக……!
வறுமையினின்றும் எம் சமூகத்தை பாதுகாப்பானாக…..!










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -