தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை பாலியல் வன்மப்படுத்திய தாயையும் தாயின் கள்ளக் காதலனையும் எதிர்வரும் 22 அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3 வருடங்களாக தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில் குறித்த சிறுமியின் தாய் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளார். சுற்றுலாச் செல்வதாகக் கூறி மகளை அழைத்துச் சென்ற தாய் இரவு தங்கு விடுதியொன்றில் மகளை தனியான அறையொன்றில் தங்க வைத்து விட்டு குறித்த காதலனுடன் தாய் தனியாக இருந்ததுள்ளார். அத்துடன் மகளுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து கள்ளக் காதலனுக்கு பாலியல் வன்மத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது
மயக்கம் தெளிந்து சிறுமி விடயத்தை உணர்ந்த போதிலும் தாயும் கள்ளக் காதலனும் வெளியில் சொன்னால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என அச்சுறுத்தியுள்ளனர். எனினும் வீடு வந்து சேர்ந்த சிறுமி வேதனை தாங்க முடியாமல் உறவினரிடம் குறித்த விடயத்தைக் கூறியதை அடுத்து பொலிஸாரால் சந்தேக நபர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதான நபர்கள் இருவரையும் விசாரித்த நீதிவான் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பெண்ணும் பொத்துவில் ஆணும் என்பது குறிப்பிடத்தக்கது.