கலீல் எஸ் முஹம்மத்-
ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்னர் மர்ஹூம் எம்.சி. அஹமட் அவர்களினால் உருவாக்கப்பட்ட அஹமட் பஸார், இந்தப் பிராந்தியத்தில் உள்ள வர்த்தக சமூகத்தினருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட 199 கடைத்தொகுதிகளுக்கு இன்றுவரைக்கும் அதற்குரிய உறுதி வழங்கப்படாமல் இருப்பது வேதனை நிறைந்த விடயமாகுமென திகாமடுல்ல மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற வேட்பாளர் மயோன் முஸ்தபா ஜூனியர் ரிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கல்முனை வர்த்தக பிரதிநிதிகளோடு நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது..!
அன்று மர்ஹூம் எம்.சி. அஹமது அவர்களினால் வழங்கிய பேர்மிட் பத்திரத்தினையே இன்று வரை வைத்திருக்கின்றனர். அந்த கடைகளுக்கு உறுதி பத்திரம் முடித்தது கொடுக்க வக்கற்ற அரசியல் தலைமைகளையே கடந்த 20 வருடமாக தம்வசம் கொண்டுள்ளனர். இதனை மாற்ற நீங்கள் ஏன் முயற்சிக்க கூடாது?
அவைகளுக்கான நிரந்தரமான உறுதிப் பத்திரங்கள் இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருக்கின்றது. எம்.சி அஹமதின் மறைவுக்கு பின்னர் எத்தனையோ தலைவர்கள் உருவாகினார்கள், இன்னமும் அவற்றுக்கான உருப்படியான எந்த ஒரு விடயமும் நடைபெறாமல் இருப்பது குறித்து மிகவும் மனவேதனையும் வெட்கமும் அடைகின்றேன்.
இருந்தபோதிலும் மலர்ந்து இருக்கின்ற இந்த புதிய அரசாங்கத்தில் எனது முயற்சியில் அவற்றிற்கான உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு முழுமையான நடவடிக்கையை எடுப்பேன் என இந்த சந்தர்ப்பத்தில் உறுதி மொழி அளிக்கிறேன்.
அதனை விடவும் எனது தந்தை முன்னெடுத்துள்ள கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதன் மூலம் கல்முனை பாரிய பொலிவுள்ள வர்த்தக நகரமாக கட்டியெழுப்படும்.
இவ்வாறு உங்களுக்காக பணியாற்றுவதற்கான ஒரு சந்தர்பத்தினையே இன்று உங்களிடம் வேண்டி நிற்கிறேன். எனது இந்த அழைப்பை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் என வேண்டுகிறேன்.