இன்று நாங்கள் மூவரும் சிகிக்சை முடிந்து எங்கள் அறைக்கு திரும்பினோம். ஆனால் எங்களுடன் சிகிட்சைக்கு வந்த கோயா அண்ணன் திரும்பி வரவில்லை......இனி அவர் வரவும் மாட்டார்.
அவரது நினைவுகளால் சூழப்பட்ட அந்த அறையில் எங்களுடன் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக வாங்கிய சில பொருட்கள் அடங்கிய பெட்டியும் இருந்தது.
அந்த பெட்டியை நிறைய நேரம் தடவிக் கொண்டிருந்தோம். அந்த பெட்டி எங்களுடைய கண்ணீர் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.
நாங்கள் நான்கு பேரும் ஒன்றாக அந்த அறையில் ஏழு வருடங்களாக வாழ்ந்து வந்தோம். எங்கள் மூவரையும் விட கோயா அண்ணன் வயதில் மூத்தவர்.
எனவே அவர் எங்கள் ரூமிலுள்ள மூத்த உறுப்பினர் ஆவார்.
கொரோனா துவங்கியது முதல் அறையில் அதிக நேரமும் அண்ணனின் ஆரோக்கிய வகுப்புகள் நடைபெறுவது வழக்கம். கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என நினைவுப்படுத்திக்கொண்டேயிருப்பார்.
24 வருடங்களாக அரேபிய மண்ணில் செலவழித்த கோயா அண்ணன் இத்துடன் அரேபிய வாழ்க்கையை முடித்து விட்டு ஊருக்கு சென்று செட்டிலாகிவிடாலாமென சிந்தித்து தொடங்கி அதற்காகத் தயாராகி கொண்டிருந்தார். அந்நேரம் தீடிரென வந்த கொரோனா பிறகும் கொஞ்சம் காலம் அவரை அங்கே தங்க வைத்து விட்டது.
அனைத்து பொறுப்புகளையும் முடித்து விட்டேன். இனி நான் என் குடும்பத்திற்கு ஒரு சுமையாகாமல் இருந்தால் போதும்." என்று அவர் சில நேரங்களில் வேடிக்கையாகச் சொல்வதை நினைத்து பார்க்கிறோம்.
அரேபிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது நினைத்திருந்த லட்சியங்களை எல்லாம் நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தாலும் லட்சியத்தை அடைவதற்காக சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன்" என்ற துக்கம் சில நேர பேச்சுகளில் அவரை அறியாமல் வெளிப்படுவதுண்டு.
மூன்று சகோதரிகளின் திருமணம், ஒரு சிறிய வீடு, தனது திருமணம் இதுதான் அவருடைய லட்சியம். இதற்காக 24 வருடங்கள் இந்த பாலைவன பூமியில் ஏராளமான வியர்வை துளிகளை சிந்த நேரிட்டது.
பின்னர் சம்பாதித்தது பல்வேறு விதமான நோய்களை மட்டுமே.
சொந்தமாகத் தனக்காக தான் சம்பாதித்த நோய்களுடன் ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் பாவம் மனிதரின் எண்ணம். பல நேரங்களில் இதை அவர் சொல்லவும் செய்திருக்கிறார்.
எல்லாம் சகித்து ஒரு வழியாக ஊர் செல்வதற்காக 1300 திர்ஹம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்த ஒரு வார இடைவேளையில்தான் கொரோனா அவரை கீழ்ப்படுத்தியது.
ஊர் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த நாள் முதல் தேனீ தேன் சேகரிப்பதைப் போன்று எல்லா நாட்களும் வேலை முடிந்து வரும் போது ஒவ்வொரு பொருளாக வாங்கி வந்து ஊருக்கு கொண்டு செல்வதற்காக தயாராக்கி வைத்திருக்கும் பெட்டியில் போடுவார். ஊர் செல்ல தயாராகும் எல்லா அரேபியக்காரர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும்.
இதை பார்க்கிற நாங்கள் சிரித்தபடி சொல்வோம். "சாதனங்கள் கொண்டு வந்து வந்து இப்படிப்போட்டால் கடைசில கிரேன் வைத்து தான் பெட்டியை தூக்கனும்”.
அப்போது சிரித்தபடி அவர் சொல்லுவார்.
“ஜீவன் இருந்தால் இந்தப்பெட்டியுடன் செல்வேன். இல்லாவிட்டால் மற்றொரு பெட்டியில் போவேன். இனி நான் போகாவிட்டாலும் நீங்கள் இதை என் வீட்டில் கொண்டு சென்று ஒப்படைப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அந்த தைரியத்தில்தான் நான் இதை நினைக்கிறேன்” என்று சொல்லுவார்.
மேலும் இந்த பெட்டியிலுள்ளதை நீங்கள் பங்கு வைத்து எடுக்காதீங்க. இனி எடுத்தால் பகுதியாவது வீட்டுக்குக்கொடுங்கள் என்று சொல்லுவார்.
ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த நாளில் இருந்து எல்லாருக்கும் சாப்பாடு கோயா அண்ணன் தான் செய்வார். நான் ஒரு வாரம் மட்டும் தானே இருப்பேன். என் தம்பிமார்களுக்கு நான் உணவு ஊட்டுகிறேன் என்று சொல்வார்.
ஒரு வெள்ளிக்கிழமை. கோயா அண்ணனின் சுவையான மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு விட்டு ஊருக்கு சென்றால் என்ன வேலை செய்வீர்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம் பல தமாசுகளும் சொல்லி சிரித்து மகிழ்ந்துக்கொண்டிருந்தோம். அதன் பிறகு கோயா அண்ணன் சொன்னார். "ஊருக்கு சென்றால் ஒரு சின்ன மளிகை கடை வைக்கலாம் என்று நாடியுள்ளேன்". பிறருக்கு நன்மை நாடுகிற உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று துஆ செய்து பிரிந்து சென்றோம்.
துஆ செய்தால் போதாது உங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் என் கடையிலிருந்து வாங்க வேண்டும் என்று சொன்னார். பதிலுக்குக்கு அனைவரும் பலமாக சிரித்தோம்.
அன்று இரவு ஒரு சின்ன காய்ச்சல் அவருக்கு வந்தது. அதுதான் ஆரம்பம். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தோம். கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு கோயா அண்ணனை மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு எங்களை தனிமைப் படுத்தினார்கள். இரு தினங்களுக்குப் பிறகு எங்களுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
உங்களுக்கும் கொரோனா உண்டு. நீங்கள் மட்டும் அப்படி தனியா இன்பம் கொள்ள வேண்டாம் என்று சொல்லி சிரித்தார்.
அன்றைய கோயா அண்ணனின் சிரிப்பு இன்றும் நினைவில் இருக்கிறது.
அதற்கு பிறகு நம்ம டிக்கெட் பணம் என்னவாகும்? அதைபற்றி விசாரிச்சு சொல்லுங்கள். நீங்கள் அந்த பணத்தை திரும்ப வாங்கி வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று கூறிவிட்டு, எல்லாம் சரியாகும் பார்ப்போம்! என்று சொல்லி போனை கட் செய்தார்.
அடுத்த நாட்களில் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. பிறகு போன் செய்ய முயற்சித்தோம். கிடைக்கவில்லை.
பின்னர் அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டார் என தெரிந்து கொண்டோம். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
எங்களால் அழக்கூட முடியவில்லை. ஒன்றாக ஏழு ஆண்டுகள் வசித்த அந்த பாவம் மனிதரின் நெற்றியில் முத்தமிட இயலாததில் நாங்கள் மிகவும் வருத்தம் கொண்டோம். கதறி அழவேண்டுமென்றுதான் முதலில் தோன்றியது.
ஊருக்கு செல்ல வேண்டுமென ஆசைப்படும் அரேபியக்காரன் இந்த பாலைவன பூமியை தேர்ந்தெடுத்தது தற்செயலாக உருவானதல்ல எந்தவொரு அரேபியக்காரனும் தங்களது விருப்பப்படி தேர்ந்தெடுப்பதல்ல இந்த வாழ்க்கை. குடும்பத்தின் கஷ்ட சூழ்நிலையால் மட்டுமே இதை தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்று நாங்கள் ரூமுக்கு திரும்பி வந்தோம். ஆள் இல்லாமல் கோயா அண்ணனின் கட்டில் தனியே கிடக்கிறது. அதை வெறித்துப் பார்க்கிறோம். எங்களால் நம்ப முடியவில்லை. பாசம் நிறைந்த அந்த மனிதன் இன்று இந்த பூமியில் எங்களுடன் இல்லை. அவரின் அருகாமை இனியும் எங்களுக்கு தேவை. இறைவா இது என்ன சோதனை!
அவரின் கட்டிலுக்கு கீழே நாங்கள் பரிசோதித்த போது எங்கள் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
ஊரிலுள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக அவர் வாங்கிய ஸ்பிரே, அத்தர், சோப்பு ஏராளமான சாதனங்கள் எல்லாவற்றையும் கோயா அண்ணனின் வீட்டில் ஒப்படைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். கோயா அண்ணன் ஊர் சேரவில்லையானாலும் அவர் ஆசையோடு சேகரித்த பெட்டியாவது ஊர் போய் சேரட்டும்.
அயல்நாடு வாழ் சகோதரர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் பரிபூரண ஆரோக்கியத்தையும் வழங்கி அருள்புரிவானாக.