அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் மதீனா மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் தன்னை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
கடந்த காலத்திலே இருந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்று தேசியத்தில் இருக்கின்ற பௌத்த வாதத்தை தூண்டுகின்ற அதற்குள் இருந்து கொண்டு இஸ்லாமியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்ற, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்துக் காட்டுகின்ற அவர்களுக்கு தேவை இருக்கிறது. கடந்த காலத்தில் இருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைக்கு அரைவாசியாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேடமாக வண்ணத்திப்பூச்சியிலே ஹிஸ்புல்லாவை களமிறக்கியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். உலகத்திலே எங்கும் கண்டிருக்க மாட்டீர்கள். இலங்கை அரசியலமைப்புக்கு முரணான வகையிலே நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு ஜனாதிபதியாக கோட்டாபய அல்லது சஜித் பிரேமதாச ஆகியோரை ஜனாதிபதியாக்க தீர்மானிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது என்று வாய் கூசாமல் பள்ளிவாயல்கள் மற்றும் மக்காவிலும் சத்தியம் செய்தார். இவர் பாரிய பொய்யை சொன்ன காரணத்தினால் வெளிநாடுகளில் ஹஜ்ஜீக்கு செல்ல முடியாது முஸ்லிம்கள் தடுமாருகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கவுள்ள இரண்டு முஸ்லிம் ஆசனங்களை குறைக்கவே இவர்கள் வண்ணாத்திப்பூச்சியில் களமிறங்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றிக்கு மாத்திரமே ஆசனம் உண்டு; வேறு எந்த கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது.
சிலவேளைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சஹ்ரானை வைத்து பதினாக்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்கள்.
தற்போது இந்த ஜனாபதி, பிரதமர் ஆட்சிக் காலத்தில் பெரும்பான்மை சமூகத்தினை திருப்திப்படுத்தவில்லை என்கின்ற பிரச்சனை உள்ளது. பல பொருட்களுக்கு விலைகளை குறைப்போம், மின்சார பட்டியலை குறைப்போம் என்று பட்டியல் இட்டார்கள். ஆனால் இவர்கள் எதுவும் செய்து காட்டவில்லை என்பதற்காக பெரும்பான்மை சமூகம் சற்று தளம்பல் நிலையில் உள்ளது என்று இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
இந்த அரசாங்கம் சரியான முறையில் கொரோணா வைரஸ் தாக்கத்தினை கையாளமையினால் எல்லா கட்சியினரும் இவர்களுக்கெதிராக பேசிக்; கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசா எண்பத்தைந்து ஆசனங்களை பெறுவார் என்று எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு கிடைக்குமாகா இருந்தால் அவரே இந்த நாட்டில் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு இல்லையேல் அடி புடிக்கு தயாரான பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. கடந்த காலம் போன்று கௌரவமாக பாராளுமன்றத்தில் விழிக்க முடியாது. கடந்த காலத்தில் குரல் கொடுத்தவர்கள் மீண்டும் இருக்க வேண்டுமாக என்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்திடம் இருக்க வேண்டும் என்றார்.
மதீனா மீனவ சங்கத்தின் தலைவர் எம்.நபீர் தலைமையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும், வேட்பாளருமான பொறியியளாளர் அப்துல் ரஹ்மான், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.