முஸ்லிம் மக்கள் பழைய பாதைகளை மறந்து புதிய பாதையில் பயணிக்க வேண்டும். முஸ்லிம் வாக்குகளால் தான் முஸ்லிம்கள் பெருமைப் படப்போகின்றார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பதன் மூலமே, இந்தப் பெருமையை நம்மால் அடைந்துகொள்ள முடியும் என, கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நிகழ்வுகள் (18) சனிக்கிழமை காலை முதல் இரவு வரை நாவலப்பிட்டிய, கம்பளை, கலுகமுவ, முறுத்தகஹமுல, வட்டதெனிய, குறுக்குத்தல, யஹலதன்ன பிரதேசங்கள் உள்ளிட்ட எலமல்தெனிய பிரதான காரியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள், வர்த்தகர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கும் போது,
கண்டி மாவட்டத்தில் இன்று பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் உற்வேகத்துடன் முன்வந்துள்ளார்கள். அவர்கள் பொதுஜன பெரமுனவுக்கே தமது ஆதரவுகளை வழங்க வேண்டும் என ஓரணி திரண்டுள்ளார்கள். நாவலப்பிட்டிய, கம்பளை, அக்குறணை மற்றும் கண்டி வாழ் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு கைகோர்க்க முன்வந்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களும் தங்களது கடந்த காலத் தவறுகளை உணர்ந்திருக்கின்றார்கள். காலா காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே தங்களது வாக்குகளை அள்ளி வழங்கிய அவர்கள் இன்று அவர்களாகவே தவறுகளை உணர்ந்து முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், அவர்களுடைய அரசியலை காலத்துக்குக் காலம் மாற்றுகிறார்கள். கட்சியையும் மாற்றுகிறார்கள். தொலைபேசி இலக்கங்களையும் மாற்றுகிறார்கள். இவ்வாறான அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைமைகளையும் நாம் எவ்வாறு நம்புவது என நான் கேட்கின்றேன்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ சிங்கள மக்களைப் போன்றே தமிழ் முஸ்லிம் மக்களையும் அரவணைத்து நேசிக்கின்றார்கள். அவர்களிடம் துவேஷமில்லை. இலங்கை வாழ் சகல சமூகத்தினரும் இலங்கையர்களே என்ற உணர்வுடனையே அவர் செயற்பட்டு வருகின்றார். அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, எளிமையான வாழ்க்கையே விரும்புகிறார். இதுதான் ஒருநாட்டுத் தலைவரின் அழகிய முன்மாதிரியாகும். இவ்வாறான ஒரு ஜனாதிபதிக்கு நாம் ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை மக்களாகிய நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்