நல்லாட்சியிலேயே மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவே, நல்லாட்சியில் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறப்படுவது பொய்யாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் 27.07.2020 அன்று இடம்பெற்ற மதியம் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இந்த அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. 60 வீதத்தால் அது குறைவடைந்திருப்பதை உணரமுடிகின்றது. இவ்வாறு அரசாங்கத்தின் செல்வாக்கு குறைவடைந்திருப்பதால் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.
எனவே, மக்கள் சிந்தித்து வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும். குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பதா அல்லது ஜனநாயகத் தலைவனுக்கு வாக்களித்து, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதா என்பது தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும்.
சஜித் பிரேமதாச என்பவர் ஊழல்அற்ற அதேபோல் நிதானமாக செயற்படக்கூடிய தலைவர் என்பதால் அவர் தலைமையிலான அணிக்கு வாக்களித்து, அதிகூடிய ஆசனங்களை பெறுவதற்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
'சிறிகொத்தவை கைப்பற்றுவோம்' என்ற கதையானது ரணில் தரப்புக்கும், சஜித் அணிக்கும் இடையிலான உட்கட்சி விவகாரமாகும். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில்தான் நாம் அங்கம் வகிக்கின்றோம். எனவே, உட்கட்சி விவகாரங்கள் தொடர்பில் நாம் கருத்து வெளியிடமுடியாது. அவர்கள்தான் பேசி முடிவுக்குவரவேண்டும்.
அதேவேளை, எங்களுடைய ஆட்சிகாலத்தில்தான் ஏழு பேர்ச்சஸ் காணியுடன் மக்களுக்கு தனி வீடுகள் வழங்கப்பட்டன. கல்வித்துறை கட்டியழுப்பட்டது. பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டன. இவை கடந்த ஆட்சியில் நடக்கவில்லை என்பதே மெய். நல்லாட்சியில் நடக்கவில்லை எனக் கூறப்படுவது பொய் ." - என்றார்.