காரைதீவு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த தமிழ் மக்கள் சனிக்கிழமை காலை தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை சந்தித்து தேசிய காங்கிரஸின் கொள்கையோடு ஒன்றிணைந்து பயணிக்க உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையிலும், கல்முனைத்தொகுதி பொதுத்தேர்தல் வேட்பாளர் றிஷாத் ஷரீஃப் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் சனிக்கிழமை (4) காலை அக்கரைப்பற்று கிழக்கு வாசலில் இடம்பெற்ற இச்சந்திப்பிலே மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனவாத அரசியல் கலாசாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இன, மத, வர்க்க பாகுபாடற்ற தேசியவாத நீரோட்ட அரசியல் செய்துகொண்டிருக்கும் தேசிய காங்கிரஸின் தனித்துவ கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, தாமாகவே முன்வந்து இணைந்துகொண்டிருப்பதாகவும் சத்தியத்தை உணர்ந்து இலட்சிய பயணத்தில் புதிய ஆதரவாளர்கள் அதிலும் விசேடமாக தமிழ் சகோதரர்கள் சாரை சாரையாக இணைந்து கொண்டு தேசிய காங்கிரஸின் சக்தியை மென்மேலும் வலுப்படுத்தி புடம்போட போகிறோம் என அங்கு இணைந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்து இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.