நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். எனது மக்களுக்கும் என்மீது முழு நம்பிக்கையும் உள்ளன. எனவே, என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு, அதிகாரம் கிடைத்ததும், செய்கைமூலம் பதிலடி கொடுப்பேன் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கூறியதாவது,
பிரதமர் மஹிந்த ராஜபக்வும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அரசியலுக்கு அப்பால் இருவருக்குமிடையில் சிறந்த நட்புறவு இருந்தது. எனது தந்தையின் மறைவுசெய்தி கேள்வியுற்றதும் கண்கலங்கி நின்றார். எங்களுக்கு ஆறுதல் கூறி தூணாக இருந்தார். அதற்காக அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைக்கூறிக்கொள்கின்றேன்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரையும் விமர்சிக்ககூடாது, குறைகூறும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது என்ற முடிவை நாம் எடுத்திருந்தோம். திட்டங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். எனினும், எதிரணியினர் விமர்சிப்பதையே பிரச்சாரமாக செய்தனர். என்னை விமர்சித்தவர்களுக்கு என்னால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை விமர்சிக்கமுடியாமல்போனது. ஏனெனில் அவர்களின் அறிவுமட்டம் அவ்வளவுதான்.
ஜீவன் தொண்டமான் சின்ன பையன், சின்ன தம்பி என விமர்சனம் செய்கின்றனர், இதே சின்ன பையனிடம் அதிகாரத்தை தந்துபாருங்கள், மலையகத்தையே மாற்றிக்காட்டுகின்றேன். இ.தொ.காவில் இருந்து வளர்ந்து முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கே அவ்வளவு திமிரு இருக்குமானால், ஆறுமுகன் தொண்டமானின் அரவணைப்பில் வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?
ஆயிரம் ரூபா என்பது தொழிற்சங்கப் பிரச்சினை. ஆனால், அதனை அரசியல் மயப்படுத்திவிட்டனர். இதனால் எமது ஏனைய பிரச்சினைகள் மறைக்கப்பட்டன. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த சின்ன பையனை நம்புகின்றனர். எனவே, எமது மக்கள் என்னை நம்பமாட்டார்களா?
நமது சமூகத்துக்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தரக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.