மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர். அங்கு தொடர்ந்தும் பேசுகையில்
பல ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்கிய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரிலோ அல்லது அக்கரைப்பற்றிலோ, சம்மாந்துறையிலோ நமது மாவட்டத்தை, நமது மாகாணத்தை தலைமை வகிக்க யாருமில்லையா? அதனால்தான் எங்களை ஏமாற்றி பொழப்பு நடத்தும் முன்னாள் அமைச்சர்களான ரிசாட்டுக்கும் ஹக்கீமுக்கும் வாக்களித்து நமது அத்தனை நலன்களையும் தவிடுபொடியாக்கி அவர்களுக்கே அனைத்தையும் தாரைவார்த்துக் கொடுத்துள்ளோம். இனியும் இந்த மக்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம் கொடுப்பார்களா? அல்லது கிழக்கிலுள்ள தலைமை அதாவுல்லாஹ்வுக்கு வாக்களித்து நமக்கான அமைச்சையும் அதிகாரத்தையும் பெற்று நம்மை நாமே ஆள்வதா? என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அம்பாறை மாவட்டத்தில் பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைமைப் பொறுப்பை அந்த நான்கு பேரில் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்கத் துப்பில்லாமல் போனது எப்படி ? நமது இனப் பெரும்பான்மை வாழும் மாவட்டத்திற்கான, நமக்கான தலைமையை, நமக்கான உரிமையை, இன்னோர் இனத்தின் அரசியல்வாதிக்கு தாரைவார்த்த துரோகத்தை இன்னும் ஏற்றுக்கொள்வதா? என்பதை சிந்தித்து பாருங்கள். கிழக்கிலிருந்து வரும் தனது கட்சிகாரர்களில் யாரும் தன்னை விட வளர்ந்துவிடக்கூடாது என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதில் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் சிறந்தவராகவே உள்ளார்.
தயாகமகே கொடுத்த சில வெகுமதிகளுக்கும், ஐயாயிரம் ரூபாக்களையும் பெற்றுக்கொண்டு அவருக்கு வாக்களித்த குற்றத்திற்காக கடந்த ஆட்சியில் ஐந்து வருடங்கள் விவசாயம் செய்யப்படாமல் கருகிப்போன பல்லாயிரம் ஏக்கர் காணிகளுக்கு தண்ணீர் தராமல் தடுத்ததே அந்த தயாகமகேதான் என்பது எமது விவசாய பெருமக்களுக்கு தெரியாமல் போனதா என்ன ?
இவர்களை நம்பி இனியும் ஏமாறப்போவதில்லை, இந்த மாவட்டம், இந்த மாகாணம் இனியும் யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படக் கூடாது, நம்மை நாமே ஆளவேண்டும். நமக்கான தலைமைத்துவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கென்ற தனித்துவமான ஒரேயொரு மாவட்டம் இது, இந்த மாவட்டத்தின் தலைமைத்துவத்தையே பெரும்பான்மைக்கு விற்ற முன்னாள் அமைச்சர்களான ரிசாட் ஹக்கீமைப் புறக்கணித்து எமக்கான உரிமையை ஒன்றிணைந்து பாதுகாத்துக் கொள்வோம் என்றார்.