கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கருத்துரையின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் உரிமைகளை மக்கள் வாக்குகள் மூலம் பெறுவதற்கே உருவானது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒன்றுபட்டு அக்கட்சியை தமது இரத்தத்தாலும் வாக்குகளாலும் வளர்த்தெடுத்தனர்,
அப்படியிருந்தும் கரையோர மாவட்டம் என்பதை கூட பெற்றுத்தர விரும்பாமல் முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டது.
கரையோர மாவட்டத்துக்கான அனுமதியை அரசாங்கம் 1978ம் ஆண்டே வழங்கிவிட்டது. அப்படியிருந்தும் அதற்கு சில சிங்கள இனவாதிகள் தடை போட்டதால்த்தான் முஸ்லிம் காங்கிரஸ் அதை பெற்றுத்தருவாக ஓட்டு கேட்டு பெற்றது.
1989ம் ஆண்டு பிரேமதாசாவுக்கு ஆதரவளித்த போது இதனை இலகுவாக பெற்றிருக்கலாம்.
பின்னர் 1994ம் ஆண்டு சந்திரிக்காவை பிரதமர் ஆக்கிய போது இதனை நிபந்தனையாக்கி பெற்றிருக்கலாம்.
2002ம் ஆண்டு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மு. கா கையில் இருக்கும் போது அன்றைய அரசுக்கு முட்டுக்கொடுப்பதாயின் கரையோர மாவட்டத்தை அறிவிக்க சொல்லியிருக்கலாம். கரையோர மாவட்டம் என்பது தனி நாடு அல்ல. வெறும் அரச நிர்வாக அலகு மட்டும்தான்.
அதன்பின் 2006ம் ஆண்டு மஹிந்த அரசில் இணையும் போது இதனை பெற்றிருக்கலாம். அந்த அரசில் இருந்து ஓடிவிட்டு மீண்டும் 2010ல் வெட்கங்கெட்டு மீண்டும் மஹிந்த அரசில் இணைந்த போது இதை மிக இலகுவாக பெற்றிருக்கலாம்.
மீண்டும் மஹிந்தவிடமிருந்து ஓடி நல்லாட்சியை கொண்டு வந்த போதாவது இதை நிபந்தனையாக்கி பெற்றிருக்கலாம்.
இவ்வாறான அருமையான சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கட்சியின் தலைவர் கெபினட் அமைச்சராக இருந்தும் கரையோர மாவட்டத்தை பெறாமல் பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போன முஸ்லிம் காங்கிரஸ் இப்போது மீண்டும் கரையோர மாவட்டத்தை கையில் எடுத்து மக்களை ஏமாற்ற வருகிறார்கள். இவர்கள் நினைத்த போதெல்லாம் முஸ்லிம்களை உசாராக்கி உசுப்பேற்றலாம் என்று முஸ்லிம்களை ஏமாந்த சோனகிரியாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆளும் கட்சியில் பல வருடம் இருந்தும் சில வேளைகளில் கிங் மேக்கராகவும் சில வேளைகளைல் ஜோக்கர்களாகவும் இருந்து எந்த உரிமையையும் பெற்றுத்தராத இக்கட்சி அடுத்த ஆட்சியில் எதிர்க்கட்சியில் இருந்து கரையோர மாவட்டத்தை பெற்றுத்தருவர் என எவராவது நம்பினால் அவரைப்போன்ற ஏமாளி உலகில் இருக்க முடியாது.
கரையோர மாவட்டம் என்பது செத்துப்போய் விட்டது. அதை முஸ்லிம் காங்கிரசே புதைத்து விட்டது.
இந்த நிலையில் கல்முனை தேர்தல் மாவட்டமே உலமா கட்சியின் கோரிக்கையாகும். அதனை பெற உலமா கட்சிக்கு மக்கள் அதிகாரம் கிடைத்தால் நிச்சயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூலம் பெற முடியும். மஹிந்த மூலம் பெற முடியாத எதையும் வேறு எவராலும் தர முடியாது.
ஆகவே முஸ்லிம் காங்கிரசின் தொடர் துரோகங்களை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் உணர்ந்து உலமா கட்சியில் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே நமக்கான தேர்தல் மாவட்டத்தை பெற முடியும்.