எனது தந்தை ரணசிங்க பிரேமதாச இன ,மத வேறுபாடுகளின்றி மூவின மக்களுக்கும் சேவை செய்ததைப் போல தானும் சேவை செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்
தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற முதன்மை வேட்பாளர் அப்துல்லா மகரூப் தலைமையில் கிண்ணியா கிராமக் கோடு மைதானத்தில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மூதூர் தொகுதியுள்ள கிண்ணியா,குறிஞ்சாக்கேணி பாலத்தை அமைச்சர்கள் மூலமாக அமைத்து தருவதோடு, மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதாக இதன்போது கூறினார்.
நான் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது 11500 வீடுகளை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருகோணமலை மாவட்டத்தில் அமைத்து கொடுத்துள்ளேன்.
இந்த மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.மீன் பிடிக்குரிய உபகரணங்களை பெற்றுத் தர முயற்சிப்பேன்.
பட்டதாரிகளின் வேலைவாய்பை கடந்த அரசாங்கத்தின் போது நியமனங்களை வழங்கினோம்.நாம் ஆட்சிக்கு வந்தவுடன் மீதமுள்ள பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழஙகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு பசளைகளை இலவசமாக வழங்குவதோடு,இந்த மாவட்டத்தில் உப்பு கைத்தொழிற்சாலையை உருவாக்கி வேலை வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் என்றார்.