அரசியல்வாதிகளின் இனவாத சதி வலைக்குள் சிறுபான்மை சமூகம் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ளது - கலாநிதி வி.ஜனகன்...!




ரசியல்வாதிகளின் இனவாத சதி வலைக்குள் சிறுபான்மை சமூகம் சூழ்நிலைக் கைதிகளாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கலாநிதி வி.ஜனகன், இலங்கையானது தொடர்ச்சியாக இனவாத ரீதியில் வலுவான தாக்கத்தை எதிர்கொண்டு
வருவதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அண்மையில் தொல்பொருள் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் நாட்டில் பாரிய சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே இதுபற்றி நாங்களும் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருந்தோம்.இந்நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புச் செயலாளரை தலைமையாக கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சி குழுவானது கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் சார்ந்த விடயங்களில் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் நாம் எமது தரப்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தோம்.
அதாவது அந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழ் முஸ்லிம் இனத்தவர்கள் இல்லை என்பதே நாம் முன்வைத்த வாதமாகும். இது குறித்து ஊடகங்கள் வாயிலாகவும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதுதவிர, தொல்பொருள் ஆய்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் எல்லாவள மேதானந்த தேரரின் நியமனம் மதவாத அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றமை தொடர்பாகவும் கண்டனங்களை வெளியிட்டிருந்தோம்.
அவரது நியமனத்தின் விளைவினை நாம் இப்போது அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
திருகோணமலையை பொருத்தவரையில் அங்கு அமைந்துள்ள திருக்கோணஸ்வரம் ஆலயமானது வரலாற்று சிறப்புமிக்க திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமான கருதப்படுகின்றது.

அந்த திருத்தலம் கோணக்க விகாரையை தளமாக கொண்டு அமைந்துள்ளதாக இன்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எல்லாவள மேதானந்த தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாயை மூடியிருக்க நாங்கள் யாரும் தயாரில்லை.

அத்துடன் இன்று நல்லூர் கந்தன் ஆலயமும் ஒரு விகாரையின் அடித்தளத்தை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட சமய தலம் என்று மேதாந்ந்த தேரர் கூறியிருப்பதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எவ்வாறாயினும், இலங்கையில் பௌத்தர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
பௌத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பிலேயே உள்ளடங்கியிருக்கின்றமையால் அதில் மாற்றுக் கருத்துக்களை கூற முடியாது.
ஆனால், பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களை மதிப்பது போன்று நாட்டில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தவர்களையும் மதிக்க
வேண்டிய கடப்பாடு எல்லோருக்குமே உள்ளது.
எனவே, நாட்டில் இருக்கின்ற தொல்பொருட்கள் மற்றும் புராதன ஸ்தலங்களை பௌத்த மதம் சார்ந்தது என்று வாதாட முற்படுவதால் இந்த செயலானது மதத்தை வைத்து அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
இந்தநிலையில், இலங்கையை சிங்கப்பூரை விட உயர்ந்த வகையில் அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கது.
ஆனால், அவ்வாறு ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் முன்பு ஒரு விடயத்தை பற்றி அவர் சிந்திக்க வேண்டும்.
ஒரு நாட்டை கட்டமைக்க வேண்டுமாக இருந்தால் , இலங்கையில் வசிக்கின்ற உரிமை அனைத்து இன மக்களும் இருக்கிறது என்ற எண்ணம் அனைவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அத்துடன் சிங்கப்பூர், அல்லது மலேசியா போன்ற நாடுகளை அவதானிக்கும் போது மதபேதமின்றி, இனவாதமின்றி
எல்லா பிரிவு மக்களும் ஒன்றிணைந்தமையினாலேயே அந்த நாடு அபிவிருத்தியை கண்டுள்ளது.
அதேவேளை, நம் நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறும் ஜனாதிபதி மதவாதத்தை தூண்டக் கூடியவர்களை தனது குழுவில் நியமித்துள்ளமை அவரது எண்ணத்திற்கும், செயற்பாட்டிக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகின்றது.

நிஜமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நிச்சயமாக நாட்டில் வாழும் அனைத்து இனங்களும், மதங்களும் ஒன்றிணைவதன் மூலமாகவே அது சாத்தியமாகும்.
ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினரின் செயற்பாடானது மேலும் மக்களை பிளவுபடுத்தி நாட்டை துர்பாக்கிய நிலைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்தும்.
அதேவேளை, மேதானந்த தேரரில் கருத்துகளைத் தொடர்ந்து இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவரும் வினோதமான மாற்றுக்கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
அந்த மதத்தலைவரும் தற்போதைய அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்பட்டு வந்தவரே.

எனவே, மதங்களை வைத்துக் கொண்டு தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்
என்ற தவறான நிலைப்பாட்டை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில். மக்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை வழங்கக் கூடிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே சாலச் சிறந்த
விடயமாகும்.
அதனைவிடுத்து மக்களிடையேயும், மதங்களிடையேயும் பிரிவினையை உருவாக்கி அரசாங்கம்
ஒன்றை அமைக்க முற்படுவது இலங்கையை இரும்புக் கதவுகள் கொண்டு கட்டுப்படுவதற்கு சமனான விடயமாகவும்.

இந்தவிடயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நாட்டை சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான நிலைமை இருப்பது புலனாகிறது.
எனவே, மதங்களை வைத்து அரசியல் நடாத்தி அரசாங்கம் அமைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு நாங்கள் இந்நேரத்தில் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கலாநிதி வி.ஜனகன் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -