தமக்கு ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலைமையினை ஜீரணிக்க முடியாத காடையர்களின் இழிவானதும் கோழைத்தனமுமான தாக்குதல்களால் தமது எழுச்சியை அடக்கி விட முடியாது என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
நேற்று(27) வவுனியா சாளம்பைக்குளத்தில் ஒரு அரசியல் வாதியின் எடுபிடிகளான காடையர்கள் குழுவொன்று எனது ஆதரவாளர்களான அப்பாவி மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இதனால் பல வாகனங்கள் சேதமுற்றதுடன் பல அப்பாவிகள் காயமடைந்துள்ளதுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நடாத்தைகளால் அவர்கள் எதனைச் சாதிக்க நினைக்கின்றனர்.
தாம் சுகபோகமாக வாழ்வதற்காக அப்பாவிகளை தாக்குவது மனிதநேயமற்றதும் கொடூரமானதாகவுமுள்ளது.
கடந்த காலங்களிலும் இவ்வாறே மாற்றுக்கட்சியினரை பழிவாங்கும் பாசிசம் வன்னியில் தாண்டவமாடியது.
அது இன்னும் தொடர்வது தான் வேதனையாக உள்ளது.
எம்மைப் பொறுத்தவரை இந்த சீண்டல்களுக்கும் ரெளடித்தனங்களுக்கும் நாம் பயந்தது கிடையாது.
ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க முனைபவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களது இந்த காடைத்தனங்களால் எமது பயணம் இன்னும் வீரியத்துடன் வேகமெடுக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு வன்முறையில் ஈடுபடுவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.