“ஒரே கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு; சமூகத்தைப் பந்தாட நினைக்கும் அலி சப்ரி” – அஷாத் சாலி தெரிவிப்பு!


ஊடகப்பிரிவு -
ண்மையான, ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள் எனவும், அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் எனவும், அதற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“மொட்டுக் கட்சிக்காக வாக்குத் தேடி அலையும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி அலி சப்ரி, வடமேல் மாகாண ஆளுநர் முஸம்மிலின் மனைவி பெரோஸா முஸம்மில், பேருவளை மர்ஜான் பளீல் ஆகியோர், இத்தனை அநியாயங்கள் நடந்த பின்னரும், முஸ்லிம் சமூகத்திடம் வந்து வாக்குக் கேட்பது வெட்கக் கேடானது. ஜனாதிபதித் தேர்தலின் போது, “முஸ்லிம்கள், மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் அம்பாணைக்கு அடிவிழும்” என, ஊர் ஊராக கூவித் திரிந்த அலி சப்ரி, பொதுத்தேர்தலில் இன்னுமொரு புதியவடிவில் தமது பிரச்சாரத்தைக் கொண்டு செல்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாவின் நிர்வாகத்தின் கீழ், இனிவரும் காலங்களில் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதம், இனம் என பதியப்படாது, இலங்கையர் என்று குறிப்பிட்டு, ‘எல்லோரும் இலங்கையரே’ என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படவுள்ளதாக, முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று, மேடை மேடையாகக் கூறி வருகின்றார். கோட்டாவை ‘சிறுபான்மைச் சமூகத்தின் காவலர்’ எனப் புகழ்கின்றார்.
ஆனால், அம்பாணை புகழ் அலி சப்ரி, இவ்வாறான பரப்புரையை முன்னெடுத்த 24 மணித்தியாலத்துக்குள் பச்சமல்ல விமல் வீரவன்ச, அலிசப்ரி இவ்வாறு பேசி வருவது முட்டாள்தனமானது எனவும், எந்தக் காரணம்கொண்டும் அவ்வாறு செய்யமாட்டோம் எனவும் சிங்களப் பிரதேசங்களில் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். ஜனாதிபதியோ, பிரதமரோ, செயலாளரோ ஒருபோதும் இதற்கு இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறி வருகின்றார். ஒரே கட்சிக்காக வாக்குக் கேட்கும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் மாறுபட்ட நிலைப்பாடே, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஜனாஸா எரிப்பு” விடயத்திலும் அலி சப்ரி கையை விரித்துவிட்டார். தன்னால் முடிந்தளவு முயற்சித்ததாகவும் ஆனால், எதுவுமே நடக்கவில்லை என்றும் அவர் முன்னர் கூறியிருந்தார்.
தேசியப்பட்டியலுக்காகவும், ஆளுநர் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் மொட்டுக் கட்சியினரின் முக்கியஸ்தர்கள், முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை உடைக்கின்றனர். அலி சப்ரி போன்றவர்கள், விமலின் இந்தக் கூற்றின் பின்னர் இனியும் வாக்குக் கேட்க அலையக் கூடாது” என்று கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -