க.கிஷாந்தன்-
" பந்தையும், துடுப்பு மட்டையையும் வழங்கி வாக்கு கேட்பவர்களை நம்பவேண்டாம். இனவாதிகளுடன் இணைந்தே அவர் போட்டியிடுகின்றார். அத்தகையவர்களுக்கு வாக்களித்தால் மலையகத்தில் மாற்றம் ஏற்படாது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் 15.07.2020 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மதியம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவரோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
" மலையக மக்களுக்கு எனது தந்தையே குடியுரிமை வழங்கினார். அதன்பின்னர் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் மட்டும் அம்மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாது. தனக்கென காணி, வீடு அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மேம்படவேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என நம்பக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வருமானம் உழைக்ககூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மலையகத்துக்கு அமைச்சுப் பதவி மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களின் நலன்புரி, அபிவிருத்தி உட்பட இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விசேட செலயணியொன்று அமைக்கப்படும். அது பிரதம அமைச்சரின் கண்காணிப்பின்கீழ் செயற்படும். திகாம்பரம் உள்ளிட்டவர்களும் அதில் இருப்பார்கள்.
பெட், போல் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கிவிட்டு வாக்குபெறலாம் என சிலர் நினைக்கின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரரை அவமதித்த வேட்பாளர் அங்கம் வகிக்கும் இனவாத கூட்டணியிலேயே இவரும் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்களிப்பதால் மலையகத்தில் மாற்றம் வரப்போவதில்லை. எனவே, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த அரசாங்கத்திடம் பொருளாதார திட்டங்கள் இல்லை. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. நாம் ஆட்சிக்கு வந்ததும் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பதுடன், உடனடியாக எரிபொருள் விலையும் குறைக்கப்படும்." - என்றார்.