திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மாஹிரை ஆதரித்து, சம்மாந்துறையில் (19) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ரிஷாட்,
“கடந்த பொதுத் தேர்தலில் சம்மாந்துறை மண், மக்கள் காங்கிரஸுக்கு ஆகக்கூடிய வாக்குகளை வழங்கியது. முதன் முதலாக அம்பாறை மாவட்டத்தில் நாம் களமிறங்கிய போதும், சுமார் 33,000 வாக்குகளைப் பெற முடிந்தது. அதற்கு நன்றிக்கடனாகவும் சம்மந்துறையை கௌரவிப்பதற்காகவுமே தேசியப்பட்டியலை வழங்கினோம். தேர்தல் மேடைகளில் தேசியப்பட்டியல் தொடர்பில், நாம் எந்த வாக்குறுதிகளையும் வழங்கியிருக்காத போதும், தவிசாளர் நௌஷாட் உட்பட ஊரின் பிரமுகர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளை கண்ணியப்படுத்தியே, எமது கட்சியின் அப்போதைய வேட்பாளர் வி.சி.இஸ்மாயிலுக்கு அதனை வழங்கினோம்.
அம்பாறை மாவட்ட மக்களுக்கும், தனது பிரதேசமான சம்மாந்துறை மக்களுக்கும் ஒரு தந்தைபோல் இருந்து, மண்ணின் அபிவிருத்தியை மேம்படுத்துவாரென நம்பினோம். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே எமது எண்ணங்கள், ஆசைகளுக்கு மண்வாரிப் போட்டார் அவர். தேசியப்பட்டியலை பெறுவதற்கு முன்னர் எம்முடன் நெருக்கமாக இருந்த அவர், அதனைப் பெற்ற பின்னர், காலப்போக்கில் எமக்குத் துரோகமிழைக்கத் தொடங்கினார். மக்களின் எதிர்பார்ப்பையும் மழுங்கடித்தார். 52 நாள் சட்டவிரோத அரசில், கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்படாமல், கட்சியை வீசிவிட்டு, தமது சுயலாபம் கருதி இயங்கிய போதும், பின்னர் அவரது ஆசை நிறைவேறாத பட்சத்தில், எம்மிடம் மன்னிப்புகோரி, இணைந்து செயற்படுவதாக வாக்குறுதி தந்தார். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு பின்னர், தனது விளையாட்டை மீண்டும் காட்டினார். இறுதிநேரம் வரை எம்முடன் இருந்துவிட்டு, இப்போது மாற்றுக் கட்சியொன்றில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள அவருக்கு, சம்மாந்துறை மக்கள் தேர்தலில் நல்லபாடம் புகட்டுவார்கள் என நம்புகிறோம்.
இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மனிதநேயம் படைத்தவரும், அன்புள்ளங்கொண்ட அரசியல்வாதியுமான மாஹிரை களமிறக்கியுள்ளோம். அவருக்கு நீங்கள் அபரிமிதமான வாக்குகளை வழங்கி, உங்கள் பிரதிநிதித்துவத்தை வென்றெடுங்கள்.
கடந்த காலங்களில், நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக, எந்தவிதமான ஆக்கபூர்வமா நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. உருப்படியான எந்தத் திட்டத்தையும் முன்வைக்கவுமில்லை. “பிச்சைக்காரன் புண் போல” பிரச்சினைகளை தீர்க்காமல் வைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வீரவசனம் பேசி, மக்களை உசுப்பேற்றுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சமூகத்துக்குப் பிரச்சினைகள் வருகின்ற போது, அறிக்கை விடுவதற்கும், அதே இடங்களுக்குச் சென்று, தம்மை பிரசித்தப்படுத்திக்கொள்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையா? உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதுமா? எண்ணிக்கைகளை விட எண்ணங்களை உறுதி செய்து, மக்களின் பிரச்சினைகளை சரியாக கையாள்பவர்களையே நீங்கள் பிரதிநிதிகளாக்க வேண்டும்.
இந்த மாவட்டத்தில் எமக்கு அதிகாரமில்லாத போதும், 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக காணி தேடி அலைந்தோம். சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்காக, கடந்த அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதும், அதனை அமைப்பதற்கு பொருத்தமான காணி இல்லாததால், அந்த முயற்சியை கைவிட்டோம். பிரதேச அபிவிருத்தி அதிகாரங்களை கையில் வைத்திருந்தவர்கள் அதற்கு இடம்தரவுமில்லை. இதெற்கெல்லாம் காரணம், நமக்குச் சொந்தமான காணிகள் பறிபோனமையே.
திகாமடுல்ல மாவட்டத்தில், நமது சமூகத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதும், இன்னும் சிறுமைப்படுத்தப்படுகின்றோம். நமது வாழிடங்களும், வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டிருப்பதால், காணிப் பிரச்சினை பூதாகாரமாகியுள்ளது.
எனவே, மக்கள் காங்கிரஸுக்கு இம்முறை நீங்கள், இந்த மாவட்டத்தில் அதிகாரம் வழங்கினால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.