சிறுபான்மையின மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலையில் 18.07.2020 அன்று இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தோம். எனினும், துரதிஷ்டவசமாக அவர் தோல்வியடைந்துவிட்டார். பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்டதால் தெற்கு மக்கள் மொட்டு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கினர். பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி தான் கொட்டகலைக்கு இராணுவம் வந்துள்ளதோ என்னவோ தெரியவில்லை.
மிகவும் முக்கியமான தேர்தல். எமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும். தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். சஜித் பிரேமதாச தலைமையிலான அணிக்கு வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்ளகூடியதாக இருக்கும்.
கடந்த நான்கரை வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எமது சேவைகளுக்கு அங்கீகாரம் வழங்கி, மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சிக்கும், எமக்குமிடையில் இன்று மோதல் இல்லை. ஆனால், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும், மொட்டு கட்சி காரர்களுக்குமிடையில் தான் மோதல் ஏற்பட்டுள்ளது.