ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்களின் எதிர்பார்ப்புக்களை நன்றாக நிறைவேற்றி வருகின்றார். இதனால் தற்போது மக்களிடம் பாரிய தெளிவுள்ளது என்று, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
பாதுகாப்பு, ஆதரவு போன்ற விடயங்களையே மக்கள் அன்று எதிர்பார்த்தார்கள். அன்று ஜனாதிபதி பதவியே மதிப்பிலிருந்தது. நாட்டில் ஜனாதிபதி பெயரைக்கூறினால் மக்கள் சிரித்தார்கள். ஆனால், இன்று அப்படியில்லை. கொரோனா தொற்று காரணமாக உலகமே ஒரே இடத்தில் ஸ்தம்பித்திருந்த வேளையில், அதனை எமது நாடு கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. இன்று நாளொன்றுக்கு இரண்டாயிரம் பேர் வரையில் அமெரிக்காவில் மரணமடைகின்றனர். ஆனால், அக்காலப்பகுதியில் எமது நாட்டில் 11 பேரே மரணமடைந்துள்ளனர். அதற்காக சுகாதாரப் பிரிவினருக்கு சரியான தலைமை மற்றும் சுதந்திரத்தை ஜனாதிபதி வழங்கிருந்தார். அந்த கெளரவத்தை ஜனாதிபதிக்கே அளிக்க வேண்டும்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியே தங்களுக்குள்ளேயே குழி பறித்துக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினையால் தான் கட்சி பிளவடைந்துள்ளது. அரசியல் என்பது பொறுமையுடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். உடைந்தால் பயணம் செல்ல முடியாது. அரசியலில் குறுக்கு வழியைத் தேடிய எல்லாத் தலைவர்களும் அழிந்துள்ளார்கள். எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு நிச்சயம் வெற்றிகிட்டும். நாம் எப்போதும் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார். 2015 இல் மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்குச் செல்லும் போது அநேகமானோர் அவரை விட்டுச் சென்றார்கள். ஆனால், நாம் அவருடன் தொடர்ந்து இருந்தோம். பல சவால்களுக்கு மத்தியில் மீண்டும் அவரை நாற்காலிக்குக் கொண்டு வந்தோம். இம்முறை எம்மால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியுமென நம்புகின்றோம் என்றார்.