ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
2015 முதல் 2019 வரைதான் மலையகத்தின் பொற்காலம் என்றுகூறலாம்.காரணம் அந்த காலப்பகுதியில் தான் உமது உரிமை சம்பந்தமான பல விடயங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.கடந்த காலங்களில் காணியுரிமை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.ஆனால் அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அமைச்சர் திகாம்பரம் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக நாலரை வருடம் இருந்தபோது தான் காணியுரிமை வீட்டு உரிமை ஆகியன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.இந்நாட்டிலே மிகப்பெரிய பிரதேசசபைகளாக இருந்த நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டு பல பிரதேச சபைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதில் இன்று தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதில் உறுப்பினராக வந்திருக்கின்றார்கள்.ஆகவே உரிமையும்; அபிவிருத்தியும் ஒன்றாக பெற்றுக்கொடுத்தது கடந்த நல்லாட்சி காலத்தில் தான் என தொழிலாளர் தேசியசங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
கொட்டகலை கிரேக்லி பகுதியில் ( 17.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் அபிவிருத்தி அதிகாரசபை போன்ற பல உரிமைகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.நாங்கள் வேலை செய்துவிட்டுதான் இங்கு வந்து வாக்கு கேட்கிறோம்.வாக்குறுதி வழங்கி வாக்குகளை கேட்கவில்லை.இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதங்கள் , அபிவிருத்தித்திட்டங்கள் யாவும் இந்த நாலரை வருட காலத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டவை.ஆகவே அந்தப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நீங்கள் தமிழ்முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.அதே நேரம் சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் தான் எமக்கு வாக்குரிமையினை பெற்றுக்கொடுத்து எம்மை கௌரவமாக வாழ வழிசெய்தவர்.பல ஆடைத்தொழிற்சாலைகளை உருவாக்கி பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தவர்.ஜனசவிய , கம்உதாவ போன்ற திட்டங்கள் மூலம்
அபிவிருத்தி செய்து கொடுத்தார்.பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீரூடையை பெற்றுக்கொடுத்தார்.ரணசிங்க பிரேமதாசவிற்கு பின் வந்த எந்தவொரு ஜனாதிபதியும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யவில்லை.அதிகார வர்க்கத்தில் வந்தவர்கள் ஒருபோதும் ஏழை எளியவர்களை பார்க்கப்போவதில்லை.இந்த நாட்டின் எளிமையான மனிதர் என்றால் அது சஜித் பிரேமதாச தான். அவரை வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாட்டையும் மலையகத்தையும் முன்னேற்றமுடியும். எனவே தொலைதூரம் சிந்தித்து தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நடைபெறவிருக்கும் தேர்தல் மிகமுக்கியமான தேர்தல் ஆகும்.இன்று இந்த நாட்டிலே இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது.சிறுபான்மை மக்களை புறந்தள்ளிவிட்டு ஆட்சியமைக்கலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.மலையக மக்கள் ஆகிய நாங்கள் சிறுபான்மை மக்களாக இருந்தாலும் கூட இந்த நாட்டில் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறோம்.ஆண்டாண்டு காலமாக இந்தநாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்துள்ளோம்.இந்த நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது இந்த நாட்டிற்கு உறுதுணையாகவும் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திற்கும் உதவியவர்கள் மலையக மக்களே.மலையக மக்கள் இல்லாவிட்டால் இந்த நாடு பட்டினியில் வாடியிருக்கும்.கடந்த காலங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியையும் ஏனைய தலைவர்களையும் மாற்றியமைப்பதற்கு முக்கியபங்கு வகித்திருக்கின்றோம்.2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவையும் தெரிவுசெய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மலையகமக்களே.ஒவ்வொறு ஆட்சிமாற்றத்தின் மலையக மக்கள் முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள்.இந்த நாட்டின் தலையெழுத்தை கூட மாற்றமுடியும் என்பதனை நிரூபித்துக்காட்டியுள்ளார்கள்.ஒரு சிலர் சிறுபான்மை மக்களின் வாக்கு தேவையில்லையென நினைக்கிறார்கள். அவ்வாறு தேவையில்லையென கூறுபவர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும.; என அவர் மேலும் தெரிவித்தார்.