தலவாக்கலை பி.கேதீஸ்-
கினிகத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையில் சிறுத்தையொன்று 12.7.2020 உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெனில்வத்த தோட்டக் குடியிருப்பை அண்மித்த தேயிலை மலைப்பகுதியில் விலங்கு வேட்டைக்காக விரிக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்குண்ட நிலையிலிருந்த சிறுத்தையை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.
சிறுத்தையை கண்ட பிரதேசவாசிகள் கினிகத்தனை பொலிஸார், நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வனவிலங்கு கால்நடை பிரிவு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து வலையில் சிக்குண்ட சிறுத்தையை மயக்க மருந்து ஊசியேற்றி உயிருடன் பிடித்தனர்.
மீட்கப்பட்ட சிறுத்தை மேலதிக சிகிச்சைக்காக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மீட்கப்பட்ட சிறுத்தை புலி ( 6 வயது ஒரு பெண் புலி ) நன்றாக வளர்ந்துள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்கு வேட்டைக்காக வலை விரித்த நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்து அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.