ஜே.எப்.காமிலா பேகம்-
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அதிகரித்த மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
குறித்த நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காக, இன்று (02) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மின் கட்டணம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மூன்று மாதங்களுக்குமாக, ஒரே தடவையில் மின் கட்டணப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, தாம் அதிக கட்டணத்தை செலுத்தவேண்டியேற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தௌிவுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்கான மின் கட்டணப் பட்டியல்களை பெருமளவானோர் செலுத்தவில்லை என்பதுடன், குறித்த மின் கட்டணப் பட்டியல்களுக்காக 20 பில்லியன் ரூபா வருமதியாக உள்ளதாகவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் விதம் தொடர்பிலான அறிக்கையை வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக , மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ள உத்தேச மின்கட்டணப் பட்டியல்கள் காரணமாக, தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களினால், முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனிடம் அண்மையில் முறையிட்டிருந்தனர்.
இதனை அடுத்து, குறித்த விடயத்தை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், அமைச்சருடன் அங்கஜன் இராமநாதன் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார்.
இதன் அடிப்படையில், உத்தேச கட்டணப் பட்டியல் விநியோகத்தை நிறுத்துமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
அத்துடன், செலுத்தப்படாத மாதங்களுக்கான மின்பட்டியல் கொடுப்பனவுகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி மானியம் மற்றும் கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் அமரவீரவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் திரு ஜனகன் விநாயகமூர்த்தியும் இவ்விடயம் சம்பந்தமாக நேற்று விசனம் தெரிவித்திருந்ததுடன்," கொரானா காலப்பகுதியில் மக்கள் வெளியே செல்ல தடை விதித்திருந்ததால், மின்பாவனை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்று,இதன்பலனாக வீடுகளில் மின்பாவனை அதிகரிப்பு ஏற்பட்டது.இருப்பினும் கட்டணம் அறவீட்டுக்கு மானி வாசிப்பாபாளர் 3 மாதங்கள் வராமல், ஒரேடியாக கட்டணத்தை மொத்தமாக போடப்பட்டதால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைலையை அரசு ஏற்படுத்தி உள்ளது.இதனால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஆகவே அரசாங்கம் மின்சார கட்டண அறவீட்டு விடயத்தில்,மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் " என்றும் அழுத்தமாக கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.