இன்று நாடும்,நாட்டு மக்களாகிய நாமும் நெருக்கடியை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
இலங்கையில் இயற்கை வனப்புமிக்க மத்திய மலைநாட்டின் கண்டி மாவட்டத்தில் அழகான சூழலில் பேர்பெற்ற ஆலிம்களை முன்னொடிகளை கொண்ட பிரதேசமாகவும்,அரசியலில் இன்று வரை பெயர் சொல்லக்கூடிய கனவான் அரசியல்வாதிகள் இருந்து வரும் பிராந்தியமாக கண்டியை நாம் நோக்குகிறோம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் மொத்த தொகையினர்களில் வடகிழக்கிற்கு வெளியில் 2/3 பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அன்று யுத்த காலத்தில் வடகிழக்கு முஸ்லிம்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், இன்று யுத்த முடிவின் பின்னரான இலங்கையில் உருவாகி வரும் இனவாதத்தினால் அதிகமாக வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இந் நாட்டின் பெரும்பான்மை சமூகத்திடம் முஸ்லிம்கள் தொடர்பான இனவாதக்கருத்துக்கள் ஊடகமயப்படுத்தப்படுவதை அண்மைக்காலமாக காணமுடிகிறது. இயற்கையாக அனர்தங்கள், கொரோனா போன்ற நோய்கள் பரவுகின்றதை வைத்தும் முஸ்லிம்கள் மீது இனவாதம் பூசப்படுவதையும் அவதானிக்கலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் கூட முஸ்லிம் சமூகத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவாத பிரச்சாரங்களூடாகவே வெற்றி கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஆட்சியாளர்களும் தங்களின் அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் மீதான இனவாதத்தை கண்டும் காணாது இருப்பதை அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்துகின்றன.
முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்த போதும் சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அன்றைய தலைவர்கள் மௌனம் காத்ததன் விளைவாக நமக்கான தனித்துவத்தையும்,இருப்பையும் பாதுகாக்கும் நோக்கில் உயிர் அச்சுருத்தல்களுக்கும் மத்தியில் கிழக்கில் இருந்து ஒரு குரல் அன்று ஒலித்தது. பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் குரலையே சற்று உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் கிழக்கின் காத்தான்குடி மண்ணில் உருவாக்கி பெரும் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட சூழுநிலையில் பலராலும் சொல்லப்பட்ட விடயம் இந்த இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் போது வடகிழக்குக்கு மாத்திரமான அரசியலை முன்னெடுக்குமாறு சொல்லப்பட்டவேலையிலேயே பெரும் தலைவர் அஷ்ரஃப் அதனை மறுத்து இலங்கை முஸ்லிம்களின் குரலாக இது ஒலிக்கும் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து செயற்பட்டார் என்பதையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கான அரசியல் அங்கிகாரம் முதன் முதலாக வடகிழக்கிற்கு வெளியில் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத்தேர்தலில் 12 ஆசனங்களூடாக வழங்கப்பட்டதை இங்கு நினைவு படுத்துகிறேன். அத் தேர்தலில் குறித்த ஆசனங்களைப் பெறுவதில் கண்டி வாழ் முஸ்லிம்களின் அர்பணிப்பையும் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூறுகிறேன்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பேரியக்கம், வளர்ச்சியடைந்து வருவதில் கண்டிய முஸ்லிம் பிரதிநிதிகளின் பங்களிப்புகளையும் மறக்கமுடியாத சூழ்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் அமர்த்தப்பட்டார்கள். அதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியான செயலாளர் நாயகமாக கண்டி நாவலப்பிட்டியில் பிறந்த சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் நியமிக்கப்பட்டதும், அரசியல் ரீதியாக அதிகாரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற போது 1994 ஆம் ஆண்டு தேசியப்பட்டியலூடாக கண்டி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற பிரதிநிதியாக, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டதையும் மறக்கமுடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தேசிய ரீதியாக செயற்பட்டாலும் கட்சிக்கு உரம் சேர்ப்பவர்களாக அன்று தொடக்கம் இன்றுவரை கிழக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பெரியது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இவ்வாறு கிழக்கில் பலம் பெற்றிருந்த கட்சி, அதன் தலைமையும் கிழக்கிலே இருந்த சந்தர்ப்பத்தில், தனக்கு பிறகு இந்த கட்சியை வழிநாடாத்திச் செல்லும் தலைவராக ரவூப் ஹக்கீம் வருவதையே விரும்பினார்.
இவ்வாறான சூழ்நிலையில் 2000 ஆம் ஆண்டு பெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சனை எழுந்தபோது கிழக்கில் பலரும் இருக்கத்தக்கதாக கிழக்கு மக்களால் குறிப்பாக அம்பாறையில் சாய்ந்தமருது மக்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் பிரதேச வாதங்களுக்கு அப்பால் ஏகமனதாக ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருவதையும் நினைவு படுத்துகிறோம்.
அரசியலில் பயனடையும் நோக்கிலே பலர் தான் சார்ந்த அரசியல்வாதிகளை ஆதரிப்பதும், கட்சி மாறுவதையும் நாம் அவதானிக்கும் சூழ்நிலையில் எவ்வித சுயநலன்களுமின்றி தங்களின் உயிர்களை கொடுத்து இந்த கட்சி வாழவேண்டும் என மரணித்தவர்கள் பலர். அவர்களின் நோக்கம் தாங்கள் மரணித்தாலும் இந்த கட்சி பாதுகாக்கப்படும் போது எமது சமூகத்தின் குரலாக திகழும் என்ற தூய எண்ணங்களுடன் செயற்பட்டு தங்களின் உயிர்களை,அவயங்களை,உடமைகளை இழந்தார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்திற்காக நீங்கள் மாத்திரமா தியாகம் செய்வீர்கள் நானும்தான் என பெரும் தலைவர் தனது சொத்துக்களை மாத்திரமின்றி தன் உயிரையும் கொடுத்தார். இவ்வாறானவர்களின் நம்பிக்கையும்,தியாகமும் வீண்போகக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கமுமாகும்.
அவ்வாறான சமூக நோக்கத்தோடு அன்று ரவூப் ஹக்கீமை அழிப்பதற்கான சூழ்ச்சிகள் மடவளையில் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் 12 இளைஞர்கள் தங்களின் உயிர்களைக் கொடுத்து பாதுகாத்ததையும்,சிலர் அந்த சம்பவத்தினால் அவயங்களை இழந்து வாழ்வதையும் நினைவுபடுத்துகிறோம்.
ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதியாக 1994 ஆம் ஆண்டு தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றம் பிரவேசித்தாலும், பெரும் தலைவரால் தூரநோகுடன் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி (NUA) கட்சி முதல் முதலாக அரசியலில் பிரவேசித்த போது கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் போட்டியிட்டு, மர்ஹும் அஷ்ரஃப் மரணித்தபோது ஏற்பட்ட நிலமைகள், சவால்களுக்கு மத்தியில் கண்டிய முஸ்லிம்கள் கணிசமான வாக்கினை வழங்கி ரவூப் ஹக்கீமை வெற்றிபெறச் செய்ததை நாம் மறப்பதற்கில்லை...
அன்று நீங்கள் உறுதிப்படுத்திய ரவூப் ஹக்கீமை, கிழக்கு மக்களால் தேசிய தலைவராக இன்றுவரை கொண்டாடி வருவதையும், 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலும்,2008 ஆம் ஆண்டி கிழக்கின் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலும் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற்றதையும், அதன் பின்னர் 2010,2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் உங்களின் பேராதரவுடன் வெற்றிபெற்றதையும் நினைவு படுத்துகிறேன்.
தற்போது நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலிலும் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் மீண்டும் சஜித் பிரமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணைந்து "தொலைபேசி" சின்னத்தில் (டெலிபோன்) களமிறங்கியிருக்கிறார்.
இன்று பேரினவாதிகள், தங்களுக்கு ஏற்றால் போல் செயற்படக்கூடிய பேசாமடந்தைகளான முஸ்லிம் தலைமைகளை உருவாக்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறனர். தங்களின் இனவாத செயற்பாடுகளுக்கு தடையாக செயற்படுகின்ற ரவூப் ஹக்கீமை, தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக, கண்டி மாவட்டத்தில் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம் வாக்குகளை பல கூறுகளாக பிரிப்பதற்கு சில கட்சிகளூடாகவும்,சுயற்சை குழுக்களூடாகவும் செல்வந்தர்களை களமிறக்கியிருப்பதை நாம் பார்க்கலாம்.
எனவே இவ்வாறான சவால்களை முறியடித்து, தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய தலைமையாக இருக்கும் ரவூப் ஹக்கீமின் வெற்றியை இறைவன் உதவியுடன் உறுதிப்படுத்த ஒன்றுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.