அஸ்ஸலாமு அலைக்கும்!
ஒரு சமூகத்தின் அறிவுபூர்வமான இயக்கத்திற்கு அடிப்படையாகத் திகழ்கின்றவர்கள் கற்றவர்களும் கல்விமான்களும் அரச உத்தியோகத்தர்களும்தான். ஒரு சமூகத்தின் வளமான எதிர்காலத்தையும் அடுத்த தலை முறை பற்றிய தூரநோக்கான சிந்தனையையும் கொண்டவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.
கற்றவர்களாகிய உங்களது சமூகப் பங்களிப்பு, சமூக அரசியலுக்காக நீங்கள் மேற்கொள்கின்ற காத்திரமான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் காலங்களில் நீங்கள் அளிக்கின்ற தூரநோக்கான வாக்குகள் என்பனவற்றில் தங்கி இருப்பதாக நாங்கள் உணர்கின்றோம்.
இப்படி மிகப் பெறுமதியான ஒரு சமூகப் பங்களிப்பை நீங்கள் ஒவ்வொருவரும் மிகச் சரியாகச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் உங்களுக்கு அளித்திருக்கிறது. இதில் நீங்கள் எடுக்கின்ற முடிவுகள், சமூக நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பதே உங்கள் மீதுள்ள தார்மீகப் பொறுப்பாகும்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற மிகப் பெரும் பலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்தான். இன்று பல கட்சிகளாகப் பிரிந்து, எமது முஸ்லிம் சமூகம் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் மக்களும் பிரிந்து வாக்களித்தால் எமது பாராளுமன்ற பிரதிநிதித் துவப் பலம் இல்லாதொழிக்கப்படும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்ற ஓர் உண்மையாகும்.
இதனை கற்ற சமூகம்தான் நன்கு உணர்ந்து அறிவுபூர்வமாக சிந்தித்து எமது மக்களுக்கு சரியான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் செய்ய வேண்டும்.
இந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுவதில் இன்ஷா அல்லாஹ், எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற உங்கள் வேட்பாளனாக நானும் நிறுத்தப்பட்டிருக்கின்றேன். அல்லாஹ் மீண்டும் அதற்கான ஒரு அரிய வாய்ப்பைத் தந்திருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த ஆட்சிக் காலங்களில் எனக்கு கிடைத்த பதவி அதிகாரத்தினால் என்னால் முடிந்தவரையான மக்கள் பணிகளையும் சமூகத்திற்கான அரசியல் பங்களிப்புகளையும் எமது தலைமுறைக்கான பல்வேறு அபிவிருத்திகளையும் மனப்பூர்வமாகச் செய்துள்ளேன் என்ற திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் தலைநிமிர்ந்தவனாக இத்தேர்தலில் ஒரு வேட்பாளனாக உங்கள் முன்னால் நிற்கின்றேன்.
கடந்த காலங்களில் நான் மேற்கொண்ட அரசியல் பணிகளையும் அபிவிருத்திகளையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு புகைப்படம் எடுத்து, நான் அவற்றை விளம்பரப்படுத்திக் காட்டவேண்டிய தேவையில்லை. அவை யாவும் எமது சமூகத்தின் கண்களிலும் மனங்களிலும் நன்றாகப் பதிந்திருப்பதாக நான் நம்புகின்றேன்.
சுயநலமின்றி, ஊர்வாதமின்றி, இன, மத பேதங்களின்றி நாடளாவிய ரீதியில் நமது சமூகத்திற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்றி, மக்களின் தொண்டனாக செயற்பட்டேன் என்பதை நீங்களும் அறிவீர்கள்.
இத்தகைய எனது அரசியல் பணியை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கும் மக்கள் குறை தீர்ப்பதற்கும் நான் மீண்டும் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற சமூகத் தேவையை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டால், உங்களின் வாக்குகளால் அந்த ஆணையை எனக்கு வழங்குங்கள்.
எனவே தொலைபேசிச்சின்னத்தில் இலக்கம் 7 இல் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!
- பைசால் காசி